சேதுசமுத்திர திட்டம் !

ஜனவரி 30, 2010

சேதுசமுத்திர திட்டத்தால் கப்பல்களின் பயண நேரம் மிச்சப்படும் என்று அரசாங்கம் சொல்கிறது.  36 மணி நேரம் மிச்சப்படும் என்று பாலு சொல்கிறார்.  ஆனால், உண்மை என்ன?

இந்த திட்டத்தின் விரிவான அறிக்கையை பார்த்தால் அதில் கண்டபடி,   கப்பல்களின் பயண நேரம் அதிகபட்சம் 30 மணி நேரம் மிச்சமாகலாம் – அதுவும் தூத்துகுடியிலிருந்து சென்னைக்கு வரும் கப்பல்களுக்கு மட்டும்.

இந்த விரிவான அறிக்கையை பார்த்தால் – இந்தியாவின் கிழக்குகரையிலிருந்து மேற்கு கரைக்கு செல்லும் கப்பல்களைத்தவிர யாருக்கும் ஒருபெரிய லாபமும் இதனால் இல்லை.

ஐரோப்பா, ஆப்பிரிக்காவிலிருந்து வரும் கப்பல்களுக்கு பயண சேமிப்பு வெறும் 8 மணி நேரம்தான்.     இந்த விவரம், இந்த திட்ட விரிவு அறிக்கையில் இல்லை (இந்த அறிக்கை திட்டம் நடத்தும் எல்&டி நிறுவனம் தயாரித்தது).

அரசாங்கத்தின் / எல்&டியின் திட்ட அறிக்கையில்  எல்லா கப்பல்களும் தூத்துக்குடி அல்லது கன்னியாகுமரியிலிருந்து கிளம்புவதாக அனுமானம் செய்திருக்கிறார்கள்.  ஆனால், அது உண்மை அல்ல.

கன்னியாகுமரி அல்லது சென்னையிலிருந்து கிளம்பும் கப்பல்களுக்கு பயண நேரம் – 10 முதல் 30 மணி நேரம் மிச்சமாகும்.  அதற்கு மாறாக,     மொரீஷியஸிலிருந்து கல்கத்தா செல்லும் கப்பல்கள் போல சில பயணங்களுக்கு பயண நேரம் அதிகமாக ஆகுமே தவிர குறையாது.

இந்த திட்ட அறிக்கையின் படி,  ஒரு கப்பல் 18,000 டாலர்  (7.4 லட்சம் ரூபாய்) மிச்சம் (எரிபொருள் சேமிப்பு) பிடிக்கும்.

இந்த திட்ட அறிக்கையில்,  இந்த சேமிப்பின் 50 சதவீதத்தை கட்டணமாக வைக்கப்போவதாக சொல்கிறார்கள்.

ஆனால், ஐரோப்பா, ஆப்பிரிக்காவிலிருந்து வரும் கப்பல்களுக்கு இந்த திட்டத்தால் வெறும் 3,000 டாலர் (1.6 லட்சம்) மட்டுமே மிச்சமாகும்.

அதனால், இந்த திட்ட அறிக்கையின்படி கட்டணம் போட்டால்,  இந்த மாதிரி ஐரோப்பா, ஆப்பிரிக்க கப்பல்களுக்கு உண்மையில் 5,000 டாலர் (2 லட்சம் ரூபாய்) ஒவ்வொரு பயணத்துக்கும் நஷ்டம் ஏற்படுகிறது.

இந்த ஐரோப்பா, ஆப்பிரிக்க கப்பல்கள் இந்த திட்டத்துக்கு முக்கியமா என்றால், ஆமாம் மிகவும் முக்கியம்.   திட்ட அறிக்கையில் 65% இந்த மாதிரி கப்பல் போக்குவரத்தைத்தான் அனுமானித்திருக்கிறார்கள்.

ஆதாயம் இல்லாததால், இந்த 65% கப்பல்கள் இந்த திட்டத்தை ஒதுக்கிவிடும்.

சரி, கட்டணத்தை குறைக்கலாம் என்று பார்த்தால், பிறகு  இந்த திட்டம் போண்டியாகி விடுகிறது.   இந்த திட்டத்தின் வருமானம் வருஷத்துக்கு 2.6%  அளவே தருகிறது.

இந்த வருமானத்தை வைத்து சாதாரண பொதுநல திட்டங்கள் எதுவுமே எடுத்துக்கொள்ள மாட்டாது.    இந்த திட்டம் சரிவர அளக்க்ப்படாமல் அரசியல் காரணங்களுக்காக போடப்பட்டதால்,    இதில் இந்தியா மிகுந்த நஷ்டப்படும்.

இந்த திட்டத்தின் பல அடிப்படை அனுமானங்கள் மிகவும் தவறானவை.

இந்த திட்டத்தால் அரசுக்கு ஒரு பைசா திரும்ப கிடைக்கப்போவதில்லை.   மாறாக,  வருடா வருடம் மேலும் நஷ்டம் ஏற்படும்.   கிட்டத்தட்ட 250 கோடி ரூபாய் வருஷம் நஷ்டம் ஏற்படும்.

இதைவிட, வருடம் இந்த 250 கோடி ரூபாயை தூத்துக்குடி, சென்னை துறைமுகங்களை மேம்படுத்தவும்,    இங்கு பயணிக்கும் கப்பல்களுக்கு சாதாரண கட்டணங்களை இன்னும் குறைக்கவும் வழி செய்தாலே மிகுந்த லாபம் ஏற்படும்.

– செய்திகளுக்கு ஆதாரம் எகனாமிக் டைம்ஸில் ஜாகப் ஜான் எழுதிய அறிக்கை.

அரசியல் லாபத்திற்காக யோசிக்காமல் செய்த இந்த திட்டம் முதலும் கோணல், முழுதும் கோணல்.   கருணாநிதியின் நினைவாக அவர் அரசியல் வாழ்வில் மறைந்த போதும் அவர் பெயருக்கு அவமானமாக இந்த திட்டம் விளங்கப்போகிறது.


கோயில்கள் ஏற்பட்டது எப்படி?

ஜனவரி 30, 2010

உலகில் எங்கும் இருப்பதைவிட இந்தியாவில்தான் அதிகமான ஆலயங்கள் இருக்கின்றன. இந்தியா முழுமைக்கும் பார்த்தால் தமிழ்நாட்டில் தான் அதிகமான பெரிய ஆலயங்கள் (கோயில்கள்) இருக்கின்றன.

இந்தப்படி அதிகமான பெரிய ஆலயங்கள் கட்டப்பட்டிருப்பவையெல்லாம்
பெரியதும் அக்கால அரசாங்க அரசர்களாலேயே கட்டப்பட்டவையாகும்.

இதற்குக் காரணம் என்னவென்றால், அக்காலத்தில் இந்த ஆலயங்கள் மூலம் அரசாங்கத்திற்குப் பணம் (நிதி) வருவாய்க்கு வழி செய்து கொள்ளும் ஏற்பாடு இருந்திருக்கிறது என்பதுதான்.

எதுபோலென்றால், சுமார் 40, 50-ஆண்டுகளுக்கு முன் வரையில் அரசாங்க நிதி (வரி) வசூலுக்கு அரசாங்கமே மதுக்கடைகளை ஏற்பாடு செய்து, அதை வியாபாரம் போல் செய்து பணம் சம்பாதித்து வரி நிதியோடு சேர்த்து வந்தது போலவேயாகும். அதனாலேயே கோவில் கட்டுவது என்பதை அரசாங்கத்திற்கே உரிமையாக வைத்துக் கொள்ளப்பட்டிருந்ததுடன், அரசாங்க அனுமதியில்லாமல் யாரும் கோவில் கட்டக்கூடாது என்கிற நிபந்தனையும் இருந்து வந்திருக்கிறது. இதற்கு அதாரம் நம் தேசத்தில் சுதேச சமஸ்தானங்கள் இருக்கும் வரை அந்த “அரசாங்க அனுமதியில்லாமல் யாரும் எந்த கோவிலையும் கட்டக்கூடாது” என்ற நிபந்தனை இருந்து வந்திருப்பதேயாகும்.

சுமார் 2000-ஆண்டுகளுக்கு முன் சாணக்கியர் என்ற ஒரு பார்ப்பனர் பொருளாதார நிபுணராக இருந்தார். அவர் உண்டாக்கிய அர்த்த சாஸ்திரம் என்னும் நீதி நூலில் இதைப்பற்றி விளக்கியுள்ளார். இந்த சாணக்கிய அர்த்த சாஸ்திரம் என்னும் நூலானது மனுதர்ம சாஸ்திரம், யாக்ஞ், வல்கியர், ஸ்மிருதி ஆகிய நூல்களுக்கும் முன்பு தோன்றியதாக ஆராய்ச்சியாளரின் முடிவு. இதிலிருந்து மனு, யாக்ஞவல்கியர் முதலிய நீதி நூல்களின் ஆயுள் சுமார் 2000-ஆண்டுகளுக்கு உட்பட்டதென்றே தெரிகிறது.

இந்த சாணக்கிய அர்த்த சாஸ்திரத்தில் மத சம்பந்தமான ஸ்தாபனங்களை மேற்பார்வைச் செய்யும் அரசாங்க அதிகாரி நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள ஆலயங்களுக்குச் சொந்தமான சொத்துக்களில் வரும்படிகளையும், கோவில்களுக்கு பக்தர்களிடமிருந்து பணமாக வசூலித்து, அந்தப்படி வசூலிக்கப்படும் பணத்தையும், அரசாங்க வருவாய் நிதியுடன் சேர்க்க வேண்டும் என்ற விதிகள் இருந்திருக்கின்றன.

அரசாங்கத்திற்குப் புதிய வருவாய்த் திட்டங்களாக மக்களை ஏமாற்றி வசூலிக்கப் பல திட்டங்கள் இருந்தன.

ஒரு இரவில் பொது மக்கள் யாருக்கும் தெரியாமல் ஒரு கடவுளை அல்லது மேடையை ஏற்படுத்தி, அதைத் தானாகத் தோன்றியது என்று விளம்பரப்படுத்தி அதை வணங்கினால் பல கெடுதிகள், வியாதிகள் விலகுமென்று கூறி, திருவிழாக்கள் முதலியன நடத்தி, அதன் மூலம் பணம் சம்பாதித்து பொக்கிஷத்தில் சேர்க்க வேண்டியது.

அரசாங்க ஒற்றர்களை விட்டு ஒரு மரத்தில் பிசாசு, முனி இருப்பதாகப்பொது மக்களிடம் பயத்தை ஏற்படுத்தி விட வேண்டும். பிறகு இதை விரட்டவும், திருப்தி செய்யவும், பெரிய சாந்தி விழா நடத்தி பெருந்தொகை வசூலித்து பொக்கிஷத்திற்குச் சேர்த்துவிட வேண்டும்.

அரசரது ஒற்றர்கள் சந்நியாசி மாதிரி வேடம் பூண்டு இந்தத் தந்திரத்தைச் செய்து பணத்தை வசூலிக்க வேண்டியது. இவற்றால் பிசாசு நகரத்தை விட்டுப் போய் விடுகிறது. பணம் அரசரது பொக்கிஷத்திற்குச் சேருகிறது. அந்த காலத்தில் அரசனுக்குப் பணம் தேடிக் கொடுக்கும் வேலை அதிகாரிகளுக்கும் கடுமையான வேலையாகவே இருந்திருக்க வேண்டும்.

மற்றும், பாம்பைக் காட்டி பணம் பறிக்கும் தந்திரம் இதைவிட விசித்திரமானது. இது இன்றுங்கூட சிறிது மாற்றத்துடன் ஒரு கோவிலிலாவது இருந்து வருவதாகத் தெரிகிறது. சாணக்கியர் காலத்தில் தீர்த்தம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்குமென்பதை எளிதாக உணர்ந்து கொள்ளலாம்.

சாதாரணமாக எளிதில் இவ்விஷயங்களை நம்பாத மக்களிடத்தில் தான் இந்தத் தீர்த்தம் உபயோகிக்கப்பட்டது. இதை அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் மருந்தாக உபயோகித்தார்கள். ஆனால், இந்தத் தந்திரங்களையெல்லாம்
அரசர்களுடைய காரியத்திற்காக உபயோகித்தார்களேயன்றி, இன்று நடப்பதுபோல் ஒரு சிலருடைய சுயநல வாழ்வுக்காகவன்று என்பதை ஞாபகத்திலிருத்திக் கொள்ள வேண்டும். தந்திரம் இரண்டும் ஒன்றுதான்.

“பார்ப்பான் தன்னலத்தையும், ஆதாயத்தையும் கருதி கோவில்களில் ஏமாற்றிப் பணம் பறிக்க எவ்விதத் தந்திரத்தையும் உபயோகிப்பான்” என்று பிரஞ்சு பாதிரியாரான கற்றறிந்த ´ஆபி டூபாய்´ ஒரு நூற்றாண்டுக்கு முன் எழுதியிருக்கிறார்.

மேலும், சாணக்கியர் கூறுவதாவது:

“அரசனது தோட்டத்தில் ஏதாவது ஒரு மரம் பால் வடித்தாலாவது அல்லது அகலமாகப் பூக்கவோ, காய்க்கவோ செய்திருந்தாலாவது அதில் கடவுள் தோன்றியிருக்கிறார் என்று பொது ஜனங்களிடம் காட்டி, பிரசித்தப்படுத்த வேண்டும்.”

“அல்லது ஒரு கிணற்றில் அநேக தலைகளையுடைய பாம்பு ஒன்று இருப்பதாகச் சொல்லி அதைப் பார்க்க வருபவர்களிடமிருந்து ஒற்றர்கள் பணம் வசூலிக்கலாம்.”

“ஒரு பாம்பு விக்கிரகத்தில் துவாரமிட்டோ அல்லது கோவிலின் இருட்டு மூலையிலோ அல்லது ஏதாவது பொந்திலோ பசியால் வாடிக் கிடக்கும் பாம்பு ஒன்றை வைத்து ஜனங்களைப் பார்க்கச் சொல்லி பணம் வசூலிக்கலாம்.”

“இம்மாதிரி தந்திரங்களை எளிதில் நம்பாத ஜனங்களுக்கு மயக்க மருந்து கலந்த நீரைத் தீர்த்தமென்றும், பிரசாதமென்றும் சொல்லி, குடிக்கும்படிச் செய்து அவர்கள் குடித்து மயங்கியவுடன் அதற்குக் கடவுள் கோபம் என்றும் என்றும் சொல்ல வேண்டியது. அல்லது தாழ்ந்த ஜாதியானொருவனைப் பாம்பு கடிக்கும்படிச் செய்து, இம்மாதிரி துர்சகுணம் நேரிடாது தடுக்கப் போவதாகப் பாசாங்கு செய்து ஒற்றர்கள் பணம் வசூலிக்கலாம்.”

“தெய்வங்களுக்குச் சமர்ப்பிக்கப்படும் காணிக்கைகள் அரசனது பொக்கிஷத்தைச் சேர வேண்டும். அரசனது செலவுக்காக அரசன் வாழும் பொருட்டு பணம் வசூலிக்க ஒரே இரவில் தேவதைகளையும், பீடங்களையும், ஸ்தாபித்து திருவிழாக்கள் நடத்த வேண்டும். காணிக்கைகளைப் பெறுவதற்காக அடிக்கடி கடவுள்கள் தோன்றும்படிச் செய்ய வேண்டும்.

சாதாரணமாக மிக வெளிப்படையான தந்திரங்கள்தான் அதிகமாகப் பலனை அளிக்கின்றது. கடவுள் தம் மூலம் பேசுவதாகப் பாசாங்கு செய்து பணம் திரட்டும் வழி முன் காலத்தில்தான் மற்ற நாட்டுப் புரோகிதர்களாலும் கையாளப்பட்டு வந்தது. ஆனால் இந்தியாவில் இன்றும் இவ்வழக்கம் ஒயவில்லை. இங்கு விக்கிரகங்களே பேசுகின்றன. இவற்றை வழிபடுகிறவர்கள் மிகக் கவனமாகக் கேட்டு பரவசமடைகிறார்கள். ஆனால், கல் விக்கிரகத்தின் உள்ளோ பக்கத்திலோ வஞ்சகன் ஒருவன் மறைந்திருந்து விக்கிரகத்தின் வாய் வழியாகப் பேசுகின்றான் என்பதை
இவர்கள் அறிவதில்லை” என்று ´ஆபே டூபாய்´ கூறுகின்றார். இவை போன்று இன்றளவும் கையாப்பட்டு வருகிற பலவிதத் தந்திரங்களையும் அவர் விரிவாக விளக்குகிறார்.

இனி நமது சாணக்கியரைக் கவனிப்போம். சாணக்கியர் காலத்தில் கோவில் வருவாயிலிருந்து ஒரு பைசாவாவது அரசனது பொக்கிஷத்தைச் சேர தவறி விட்டால் அந்த இடத்திலேயே கோவில் அதிகாரி ஏன் தூக்கிலிடப்பட்டிருப்பார் என்பதை நாம் மேற்சொன்னவற்றிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அது மிகவும் நியாயமே. ஏனெனில், அக்காலத்தில் விக்கிரகங்களும், பீடங்களும் அரசனது வியாபாரத்திற்காக ஏற்பட்டவைகளாகும். பொது ஜனங்களின் பணத்தைச் செலவிட்டே விக்கிரகங்களையும், பீடங்களையும், மடங்களையும் உண்டு பண்ணி பரிபாலித்து அவற்றைப் பற்றி பெரியதாக விளம்பரப்படுத்தியும் வந்தார்கள். இக்காலத்தில் அரசாங்கத்தார் எவ்வாறு பெரும் பொருள் செலவிட்டு மேட்டூர் தேக்கத்தையும், சுக்கூர் அணைக்கட்டையும் கட்டி அவற்றினின்றும் லாபத்தை எதிர்பார்க்கின்றார்களோ அதே போல முன்காலத்து அரசர்கள் கோவில்களையும், ஸ்தலங்களையும், உற்பத்தி செய்ததும் லாபத்தைக் கருதியோயாகும்.

இம்மாதிரி ´மத ஸ்தாபனங்களை´ ஏற்படுத்தி முற்கால மன்னர்களைச் சுற்றி விரோதிகள் எப்பொழுதும் இருந்து வந்ததால் இடைவிடாது யுத்தங்கள் நேரிட்டுக் கொண்டேயிருந்தன. இதற்காக அவர்கள் பெருஞ்சேனைகளை வைத்திருந்தனர். யுத்தங்களுக்கும், சேனைகளுக்கும் வேண்டிய பணத்திற்காக ஏராளமான வருவாய் தேவைப்பட்டது. கோவில் வருவாயைக் கொண்டு பார்ப்பனருக்கு மட்டும் சோறு போடுவது என்றிருந்தால் அரசும், கோவிலும் அன்றே மறைந்திருக்கும். இக்கோவில்களையும், பீடங்களையும், கடவுள்களையும் படைத்த அக்காலத்து அரசர்களுக்கு அரசாங்கத்தை நடத்தும் கஷ்டம் எவ்வளவு என்று தெரியும்.

உதாரணமாக பூரண மதுவிலக்கு ஏற்பட்டால் நாட்டில் உயர்தரக் கல்வியை நிறுத்த நேரிடுமென்று இன்று (இராஜாஜி முதலியவர்கள்) சொல்லுவது போல, தங்களது ஷேமமும் கோவில் வருமானத்தில் தொங்கிக் கிடந்தன என்பதை அக்கால அரசர்கள் அறிந்திருந்தார்கள். ஆதலால் அவர்கள் அதன் மீது மிகுந்த கவனம் செலுத்தி வந்தார்கள். இவ்வுலக சுக துக்கங்களைக் குறித்து அவர்கள் நினைத்தார்களேயன்றி மோட்சலோகத்தைப்பற்றி நினைக்கவில்லை. இக்காலத்து சுதேச மன்னர்களில் பெரும்பாலோர் யாதொரு பொறுப்பும் கவலையுமெடுக்காது மோட்சலோகத்தைப் பற்றி நினைக்கிறார்கள். பார்ப்பானை திருப்தி செய்தால் மோட்சத்துக்குச் சீட்டு கிடைத்துவிடுமென நம்புகிறார்கள். அங்ஙனம் செய்துவிட்டு தங்கள் ராஜ்ஜியங்களைவிட்டு தற்கால மோட்ச பூமியான பாரிஸ் முதலிய மேல்நாடுகளுக்குச் சென்றுவிடுவதுமுண்டு.

சர்தார் கே.எம். பணிக்கர் அவர்கள் “இந்திய சமஸ்தானங்களும், இந்திய அரசாங்கமும்” என்ற தனது புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகின்றார்.

“பல சிற்றரசர்கள் மிதமிஞ்சிய சுக போகங்களுடன் இழிவான வாழ்க்கை வாழ்வதற்குக் காரணம் அவர்கள் இராஜ்ஜிய பாரத்தில் நேராக பொறுப்பேற்று நடத்தாதயேயாகும். முன் காலங்களில் குடிகளைத் துன்புறுத்தும் கொடுங்கோல் மன்னனையும் தனது சுகமொன்றையே கருதும் துர் நடத்தைக்காரரையும் சும்மா விட்டு வைத்திருக்க மாட்டார்கள்.
வெளியிலிருந்தேற்படும் படையெடுப்போ அன்றி உள்நாட்டுக் கலகமோ அவனது வாழ்க்கையை முடித்துவிடும். ஆனால் இக்காலத்தில்
அப்படியல்ல. ஒரு அரசன் தான் பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு செய்து கொண்ட உடன்படிக்கையை மீறாதிருப்பதுவரையும் நாகரீக ஆசாரங்களை வெளிப்படையாக புறக்கணியாதிருப்பது வரையும் அவனுக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தார் ஆதரவிருக்கின்றது. அவன் தனது சுக போகங்களுக்காகத் தன் இஷ்டம் போல் பொக்கிஷத்தை உபயோகிக்கவும், குடிகளை கொள்ளையடிக்கவும் விட்டுவிடுகிறார்கள்.”

சர். தாமஸ் மன்ரோவின் அடியிற்கண்ட குறிப்புக்களையும் திரு பணிக்கர் அவர்கள் எடுத்துக் கூறுகிறார்கள்.

“இந்தியாவில் மோசமான ராஜ்ய பாரம் ஏற்படுமாயின் அரண்மனையில் புரட்சி உண்டு பண்ணியோ அல்லது உள்நாட்டுக் கலகத்தாலோ அதைச்
சரிபடுத்துவதுதான் வழக்கம். ஆனால், உள்நாட்டு வெளிநாட்டு விரோதிகளினின்றும் மன்னனைக் காப்பாற்ற பிரிட்டிஷ் படைகளிருப்பதால் அவ்விதம் கொடுங்கோன்மையைப் பரிகரிக்கும் வழியெதுவுமில்லாமற் போய்விடுகின்றது. தனது பாதுகாப்புக்கு அன்னியர் உதவியிருக்கிறதென்று நம்பிக்கையால் அவன் சோம்பேறியாய் விடுகின்றான். தனது குடிமக்களுடைய வெறுப்பு தன்னையொன்றுஞ் செய்ய முடியாதவனாகவும் பேராசை பிடித்தவனாகவும் ஆகிவிடுகின்றான்.”

கோவில்களிலிருந்து தனக்குப் பணம் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதொன்றையே அரசன் கவனிப்பான் என்பது இதுகாறும் எடுத்துக் காட்டியவற்றிலிருந்து விளங்கும். யார் கோவிலுக்குப் போய் வணங்கினார்கள்; யார் மதுவருந்தினார்கள் என்பதைப்பற்றியெல்லாம் அவன் கவனித்ததில்லை. இவர்கள் சண்டாளராகவும், சூத்திராகவும், வைசியராகவும், சத்திரியராகவும், பிராமணராகவும் இருக்கலாம். சண்டாளனாக விருந்தாலும் அவன் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகப் பணம் கொடுக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அரசனும் திருப்தியடைந்திருப்பான். பணம் வரும் என்று தெரிந்தால் அரசன் தனது விக்கிரகங்களையும், பீடங்களையும், ஸர்ப்பங்களையும் கொண்டு சண்டாளருக்கு விசேஷ வேடிக்கைகளையும் காட்டியிருப்பான். ஒரு சண்டாளன் தனது கோவிலுக்குள் நுழையவோ, விக்கிரகத்தையோ, பாம்பையோ, மரத்தையோ வணங்கவோ செய்யவொட்டாமல் ஓர்
வர்ணாசிரம தர்மி தடுப்பது நிமித்தம் தனது காதுக்கு எட்டினால் இம்மாதிரி தடை செய்பவர்கள் பார்ப்பனராக இருந்த போதிலும் இவர்களை சமீபத்திலிருக்கும் மரத்தில் கட்டி தூக்கியிருப்பான்.

அக்காலத்தில் இந்துக் கோவில்கள் அரசனுடைய வருவாய்க்கு அவ்வளவு தூரம் மூலகாரணமாயிருந்தன. ஆகவே எக்காரணத்தைக் காட்டியேனும் இவன் சண்டாளன்; இவன் தாழ்ந்த சாதி; ஆகையால் கோவிலுக்குள் போகவோ, வணங்கவோ கூடாதென்று யாரேனும் சொன்னால் அவன் அந்த இடத்திலேயே கொடிய குற்றஞ் செய்தவனாகக் கருதப்பட்டிருப்பான்.

கோவில்கள், அரசாங்க ஸ்தாபனங்களாகவிருந்தன; ஏதேனும் ஒரு ஸ்தாபனம் ´பொதுச் சொத்து´ என்று சொல்லக்கூடியதாக இருந்திருந்தால் அது இந்தக் கோவில்களாகும். இப்போது உயர் சாதி இந்து வக்கீல்கள் கோயில்களைப் பொது ஸ்தாபனங்கள் என்று சொல்லும் போது ஒரு புது மாதிரியான விசேஷ அர்த்தத்துடன் சொல்லுகின்றார்கள். பிரதம திருஷ்டியில் நான்கு சாதியாருக்கும் தட்டுத் தடையின்றி இக்கோயில்களில் பிரவேசித்து வழிபட உரிமையுண்டு என்பது இவர்கள் கூற்றாகும்.

“வேதங்களை அடிப்படையாகக் கொண்ட ஆரிய மதத்தில் விக்கிரக ஆராதனையில்லை. இது பின்னர் தோன்றிய இழிவுபட்ட ஆராதனையாகும்” என்று காலஞ்சென்ற மாக்ஸ்முல்லர் என்னும் உலகப் பிரசித்தி பெற்ற மேல்நாட்டு ஆசிரியர் கூறுகின்றார்.

வங்காள தேசத்து பிரபல வழக்கறிஞரான மிஸ்டர் ஜே.சி. கோஷ் தமது தாகூர் சட்டப் பிரசங்கத்தில் அடியில் வருமாறு குறிப்பிடுகிறார்.

மக்கள் யாகம் முதலியவற்றை நடத்தி வந்த காலத்தில் கோயில்களையும், விக்கிரகங்களையும் ஸ்தாபிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. பிராமணர்கள் மட்டுமே அக்கினியை வளர்க்கலாம். அதனால் அவர்களை அக்கினி ஹோத்திரிகள் என்றழைத்தார்கள். மற்ற சாதியாரும் உயர்ந்த போது அவர்கள் வழிபடத் தெய்வங்கள் வேண்டியதாயிற்று. பிராமணரது ஆதிக்கம் குறையவும், அக்கினி வணக்கம் தனது செல்வாக்கையிழந்தது. இதிலிருந்து விக்கிரக வணக்கம் ஆரம்பமாயிற்று. மற்றும் புத்த விக்கிரகங்களையும், ஸ்தூபிகளையும் ஸ்தாபித்து புத்த மதத்தினர் வழிபட வாரம்பித்தது இந்துக் கோயில்களையும், விக்கிரகங்களையும் ஸ்தாபிப்பதற்கு வழிகோலியாயிற்று.

விக்கிரகங்களையும், கோயில்களையும் ஏற்படுத்தியபோது அவற்றைப்
பரிபாலிக்க சொத்துக்களை விட வேண்டியதும் அவசியமாயிற்று! எனவே நிலங்களை விட்டதுமன்றி, பல பழைய கோவில்களில் மக்களை ஈர்க்க (அடிமைப் பெண்களையும்) தாசிகளையும் விட்டார்கள். இதிலிருந்து இந்தியாவில் எந்த நோக்கத்துடன் விக்கிரக ஆராதனை ஆரம்பிக்கப்பட்டது என்பது புலனாகும். இப்பொழுது ஒவ்வொரு கோயிலிலும் நடன சாலை இருப்பதாகவே கருதப்படுகிறது என்று மிஸ்டர் கோஷ் சொல்கிறார்.

பண்டைக்காலத்தில் இக்காலத்திலிருப்பது போலவே கோவில்கள் வேடிக்கை விநோத ஸ்தலங்களாகவே இருந்து வந்தன. இவ்வுத்தேசத்துடன் தான் அக்கால அரசர்களும் ஆலயங்களை ஏற்படுத்தியிருந்தார்கள். எனவே இந்நாட்டிலிருக்கும் பல கோயில்கள் வேசியர் விடுதிகளைவிடச் சிறந்தவையல்லவென்று காந்தியார் குறிப்பிட்டது சரித்திரப்படியும் மிகையாகாது. இந்நோக்கத்துடனேயே ஆலயங்களை ஸ்தாபித்தார்கள் என்பது சரித்திரப் பூர்வமாக உண்மையாகும்.

– (1970-ம் ஆண்டில் வெளியான தந்தை பெரியார் அவர்களின் 92-வது பிறந்த நாள் விழா மலரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை)


கண்ணகி கதை இலக்கியமா ? -தந்தை பெரியார்

ஜனவரி 30, 2010

[இக் கட்டுரையில் கண்ணகி, கற்பு, பத்தினிப் பெண்கள் பற்றிய பெரியாரின் கருத்துகள் இடம் பெறுகின்றன. ‘பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், 50 ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை – 600007 ‘ வெளியிட்டுள்ள ‘பெரியார் களஞ்சியம் ‘ நூல் வரிசையின் ஆறாம் தொகுதியில் வெளிவந்துள்ள கட்டுரை இது. – தட்டச்சு செய்தவர்:ஆசாரகீனன்]

கண்ணகி சினிமாவை பார்த்தேன். அதன் பிறகு அந்தக் கதையைப் பார்த்தேன். பழந் தமிழர் பெருமைக்கு இந்தக் கதையா ஆதாரம் என்கின்ற ஆத்திரம்தான் வந்தது. இதைப் போன்ற முட்டாள்தனமான கதை ஆரியப் புராணங்கள் ஆகியவற்றிலும் இல்லை என்பது எனது அபிப்பிராயம். இந்தக் கதை ஓர் இலக்கியமாக இருப்பது தமிழர்களின் மானக்கேடுதான்.

கண்ணகி, கண்ணகி கால மக்கள் நிலை, கண்ணகி கால அரசர்கள் தன்மை, கண்ணகி காலக் கற்பு, கண்ணகி காலத் தெய்வங்கள் முதலியவை எல்லாம் ‘பண்டைத் தமிழரின் தன்மையை விளக்குகின்றன ‘ என்றால் நாம் ஆரியர்களுக்குச் சூத்திரராய் இருப்பது மேலான காரியமாகும். அந்தக் காலத்திலேயே பெண்கள் ஆண்களுக்கு அடிமைகளாக இருந்திருக்கிறார்கள். அந்தக்கால அரசர்கள் அநீதி இல்லாதவர்களாக இருந்திருக்கிறார்கள். அந்தக் காலத் தெய்வங்கள் நியாயம், அநியாயம் இல்லாமல் பார்ப்பனர்கள் தவிர மற்ற நிரபராதிகளையெல்லாம் வெந்து சாம்பல் ஆகும்படி செய்திருக்கின்றன. புத்தியே இல்லாத வெறிபிடித்த பெண் ஒரு தேவதையாக ஆகி இருக்கிறார்கள். தாசி வீட்டில் இருக்கும் ஓர் ஆண் பிள்ளை எந்தப் பெண்ணைப் பற்றியும் சிந்தித்துப் பாடலாம். தாசி வேறு ஓர் ஆணைப்பற்றிப் பாடக்கூடாது என்பதைக் காட்டுகிறது. இந்த லட்சணத்தில் கண்ணகிக்குக் கோயில் கட்டிய முட்டாள்தனமும், கண்ணகித் தெய்வத்தின் பெருமையும், இராமாயண, பாரத, பெரிய புராணப் புளுகையும் மூட நம்பிக்கையும் தோற்கடித்து விடும்போல இருக்கிறது. (கண்ணகி கதையிலுள்ள மூட நம்பிக்கைகளைத் தொகுத்து மற்றொரு சமயம் கூறுவோம்) கண்ணகி நாட்டில் இருந்த கற்புள்ள பெண்களைப் பார்த்தால், உலகத்தில் உயிருடன் கூடிய எப்படிப்பட்ட பெண்ணும் கற்பாய் இருக்க முடியவே முடியாது என்பதுடன், கடுகளவு கூட அவை அறிவுக்கும் மனிதத் தன்மைக்கும் பொருத்தமாக இருக்கிறது என்று சொல்லவும் முடியாது. உதாரணம் சொல்லுகிறேன் பாருங்கள்.

முதலாவது பத்தினிப் பெண்

கண்ணகி மதுரைப் பாண்டிய மன்னனிடம் தனது இருப்பிடத்தைப் பற்றிச் சொல்லும்போது, தனது நாட்டில் ஏற்கனவே இருந்த 7 கற்புள்ள மகளிரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறாள். அதை இங்கு குறிப்பிடுகிறேன். அப்பெண்களின் கற்புத் தன்மைகளாவன:

இவள் ஒரு காட்டில் திரிந்து கொண்டு இருந்த ஓர் அழகிய பெண். இவளை அங்கு இருந்த ஆண் மகன் கண்டு ஆசைப்பட்டான். உடனே கூடிக் கலவி செய்தார்கள். அந்த ஆண் தன் காரியம் தீர்ந்ததும் அவசரமாக எழுந்து போய்விட்டான். பிறகு அந்தப் பெண் அலைந்து திரிந்து அவனைக் கண்டுபிடித்தாள். அப்போது அவன் அவளைத் தனக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டான். அதற்கு அவள் தாங்கள் இருவரும் கலவி செய்த இடத்தைக் குறிப்புச் சொன்னாள். அதுவும் தெரியாது என்று சொல்லிவிட்டான். பிறகு அந்தப் பெண் இவனைத் தான் கலந்தது உண்மையானால், அதுமுதல் இவனைத்தவிர வேறு கணவனை மனதில் நினையாமல் கூட இருந்தது உண்மையானால், தாங்கள் கலவி செய்த அந்தக் காட்டுக் குடிசையும், அதன் பக்கத்தில் இருந்த வன்னிமரமும் இந்த இடத்திற்கு வந்து சாஷி சொல்லவேண்டும் என்று கடவுளை வேண்டினாள். அது போலவே அந்தக் குடிசையும், வன்னி மரமும் அந்த விவகார இடத்திற்கு வந்து, ‘ஆம் இவன் இவளைக் கூடினான் நாங்கள் பார்த்தோம் ‘ என்று சாஷி சொல்லிற்று. பிறகு சேர்த்துக் கொண்டான். எனவே, இவள் ஒரு பத்தினி.

இரண்டாவது பத்தினிப் பெண்

இரண்டு பெண்கள் ஆற்று ஓரம் கரையில் ஊசலாடுகையில், ஒரு பெண் மற்றொரு பெண்ணைப் பார்த்து, அங்கிருந்து ஒரு மணற் பாவையை (உருவத்தை)க் காட்டி இதுதான் உன் கணவன் என்று சொன்னவுடன், அந்தப் பெண் அந்த இடத்தைவிட்டுப் போகாமல், ஆற்று வெள்ளம் அந்தப் பாவையை அடித்துக் கொண்டு போகாமலும் கரைந்து போகாமலும் காப்பாற்றினாள். இவள் ஒரு பத்தினிப் பெண் ?

மூன்றாவது பத்தினிப் பெண்

கரிகாற்சோழன் மகள் இவள். தன் கணவனைக் காவேரி அடித்துக்கொண்டு போய்க் கடலில் சேர்த்துவிட, அவனைத் தேடிச் சென்று கடலினிடத்தில் முறையிட்டுக் கடல் கணவனைத் தரப்பெற்றுத் திருப்பிக் கொண்டு வந்தவள். இவளொரு பத்தினிப் பெண்.

நான்காவது பத்தினிப் பெண்

தன்னைவிட்டுப் பிரிந்து போன கணவன் வரும் வரை கடல் கரையிலேயே அவன் போன வழியைப் பார்த்துக்கொண்டே கல்லாகக் கிடந்திருந்து, கணவன் வந்தபிறகு பெண் உருப்பெற்றுக் கணவனுடன் வீடு வந்து சேர்ந்தவள். இவள் ஒரு பத்தினிப் பெண்.

அய்ந்தாவது பத்தினிப் பெண்

ஒருத்தி தன் மாற்றாள் குழந்தை கிணற்றில் தவறி விழுந்துவிடத் தன் குழந்தையையும் கிணற்றில் போட்டுவிட்டு இரண்டும் வெளி வரவேண்டும் என்று சொல்லி, அக்குழந்தைகளை அடைந்தாள். இவளொரு பத்தினிப் பெண்.

ஆறாவது பத்தினிப் பெண்

இவள் கணவன் தன்னை விட்டுப் பிரிந்து இருந்த காலத்தில் வேறு ஒருவன் இவளை உற்றுப்பார்த்தது கண்டு தன் முகத்தைக் குரங்கு முகமாக்கிக் கொண்டு கணவன் வந்ததும் அதை மாற்றிக் கொண்டாள். ஆகவே, இவளொரு பத்தினிப் பெண்.

ஏழாவது பத்தினிப் பெண்

ஒரு பெண் தன் தோழியைப் பார்த்து விளையாட்டுக்காகத் தான் ஒரு பெண்ணையும் அவள் ஓர் ஆணையும் பெற்றால், அவ்விருவரும் கணவனும் மனைவியுமாக வாழ்வர் என்று சொன்ன சொல்லை அத்தோழி அப்பெண்ணின் மகளிடம் கூற, அந்த மகள் உடனே அந்தத் தோழியின் மகனுக்கு மனைவி ஆகிவிட்டாள். இவளொரு பத்தினிப் பெண்.

‘ஆகவே, நான் இந்த ஏழு பத்தினிகளும் பிறந்த ஊரில் பிறந்த பெண் ஆகையால், நானும் கற்புள்ள பெண்ணாய் இருந்தால், இந்த மதுரை மாநகரம் தீப்பிடித்து எரிய வேண்டும். ஆனால், மதுரையில் உள்ள ஆரியர்களை எரிக்கக்கூடாது ‘ என்று சொல்லித் தனது முலைகளில் ஒன்றைத் தன் கையில் கெட்டியாகப் பிடித்துத் திருகிப் பிடுங்கி எறிந்து அதிலிருந்து நெருப்புப்பற்றிக் கொள்ளச் செய்தாள்.

எனவே, தமிழ்நாட்டின் பழந்தமிழ் மக்களின் புத்திக்கும், நடைக்கும், ஒழுக்கத்துக்கும், ஆட்சி முறைக்கும், வீரத்திற்கும் இந்த இலக்கியங்கள் எடுத்துக்காட்டாக ஆகுமா என்று உங்களைக் கேட்கிறேன். இது எந்த விதத்தில் ஆரியர் புளுகையும் முட்டாள்தனத்தையும்விட குறைந்து இருக்கிறது என்று கேட்கிறேன்.

– விடுதலை ஜூன் 16, 1943


பொங்கல் தமிழர் திருநாளா? அப்படியா? பரவாயில்லையே!

ஜனவரி 30, 2010



mattu-vandi.jpg

சென்னை லயோலா கல்லூரி, மாணவர் பேரவையால் நடத்தப்பட்ட ‘விழி’ என்ற மாத இதழுக்காக 2007 ஆம் ஆண்டு கடைசியில் எழுதியது.

***

யிரம்தான் பொங்கலை தமிழர் திருநாள் என்று உரக்கக் கூவி பார்த்தாலும், தீபாவளிக்கு இருக்கிற மவுசு பொங்கலுக்கு இல்லைதான்.

என்ன காரணம்?

முதலாளித்துவமும் பார்ப்பனியமும்தான் காரணம்.

உங்களுக்கு வேற வேலை இல்லையா? எதற்கெடுத்தாலும் பார்ப்பனியம்… முதலாளி…இப்படியே சொல்லிக்கிட்டு இருங்க. சரி எப்படி காரணம்?

தீபாவளி கொண்டாடப்படுவதற்கு காரணமாக சொல்லப்படுகிற கதைகளில் பல முரண்பாடுகள் இருந்தாலும், அதன் உள்ளடக்கம் முழுக்க முழுக்க பார்ப்பன நலன் அல்லது அதன் உயர்வு சார்ந்ததாக இருக்கிறது.
பார்ப்பனரல்லாதவர்கள் தீபாவளியை தங்கள் பண்டிகையாக விரும்பி விசேஷமாக  கொண்டாடுவதற்கு, மத ரீதியாக பல கவர்ச்சிகரமான மத்தாப்புகள் கொளுத்திப் போடப்படுகின்றன.

சரி. இதுல முதலாளித்துவம் எங்கிருந்து வந்துச்சு?

பார்ப்பனியம் முதலாளித்துவத்தோடு கைகோர்த்து, அதிகார மட்டத்தில் இருப்பதால்தான், தொழிலாளர்களுக்கு ‘போனஸ்’ பொங்கலுக்கு தரமால், தீபாவளிக்கு தரப்படுகிறது.

தீபாவளி விசேஷமாக கொண்டாடப்படுவதின் 100 சதவீத காரணம் இதுதான்.
தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே முதலாளிகளும், வர்த்தக நிறுவனங்களும் தொழிலாளர்களின் ‘போனசை’ குறிவைத்து தங்களின் விளம்பரங்களின் மூலம் ‘தீபாவளி கொண்டாட்டத்திற்கு’ மக்களை தயார் செய்கிறார்கள். தனது தள்ளுபடி மோசடியையும் ஆரம்பித்துவிடுகிறார்கள்.

சரி, அதுக்கு என்ன செய்யிறது?

தீபாவளிக்கு இருக்கிற மவுசை குறைத்து அதை பொங்கலுக்கு கூட்ட வேண்டும் என்றால், தீபாவளிக்கு தருகிற ‘போனசை’ நிறுத்தி, அதை பொங்கலுக்கு  மாற்றவேண்டும்.

மாற்றினால்?

“விழாக்கள், பண்டிகைகள் எல்லாம் முதலாளிகளின் வேட்டை நாய்கள்” என்றார் காரல் மார்க்ஸ். அந்த வேட்டை நாய்கள் எல்லாம் பச்சை தமிழனாக மாறி பொங்கலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே ‘தமிழர் திருநாளை கொண்டாட எங்களிடம் வாருங்கள்’ என்று பொங்க ஆரம்பித்துவிடும்.

அப்புறம் என்ன ஆகும்?

வழக்கம் போல தாழ்த்தப்பட்ட மக்களை தள்ளிவைச்சிட்டு, ‘தமிழர் திருநாள்’ விசேஷமாக கொண்டாடப்படும்.

என்னங்க இது புது கதையா இருக்கு? தாழ்த்தப்பட்ட மக்களை யாருங்க தள்ளிவைச்சா? எதையாவது சொல்லி குழப்பத்தை உண்டு பண்ணிக்கிட்டே இருங்க.

jalli.jpg

நீங்க என்ன சந்திர மண்டலத்துல இருந்து வந்திருக்கீங்களா? தமிழர்களின் ‘வீர விளையாட்டு’ என்று சொல்லப்படுகிற, ஜல்லிகட்டில் – மாட்டை அடக்குற போட்டியில் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிப்பதில்லை, என்பது உங்களுக்குத் தெரியாதா?

‘மாட்டுபொங்கல்’ என்று ஒரு நாளை தீர்மானிச்சு, அந்த நாளில் தனக்கு உழைத்தவர்கள் என்கிற அடிப்படையில் மாட்டையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் ஒரே நிலையில் வைத்து ‘மரியாதை’ செய்கிற பழக்கம் என்ன ஜப்பான்காரன் பழக்கமா?

பார்பபனர்களை திட்டுன சந்தோஷபடுறீங்க. உங்க கதையை எடுத்து உட்டா உடனே, நீங்களும் பார்ப்பனரா மாறிடிறீங்க? என்னங்க நியாயம் இது?

-வே. மதிமாறன்


இராமராஜ்யத்தில் வீதிக்கொரு ஜாதி; ஜாதிக்கொரு நீதி!அம்பேத்கர்

ஜனவரி 30, 2010

இராமன் ஒரு மன்னன் எனும் நிலையை ஆராய்வோம். நெறிசார்ந்த மன்னன் என இராமன் கருதப்-படுகிறான். ஆனால், அம்முடிவு உண்மைகளை அடிப்படையாகக் கொண்டதா? உண்மை-யென்னவெனில் இராமன் மன்னனா யிருந்து ஒரு போதும் கோலோச்சவில்லை. பெயரளவில் தான் அவன் மன்னனாய் இருந்திருக்கிறான். ஆட்சிப் பொறுப்பு அனைத்தும் அவன் தம்பி பரதனிடமே ஒப்படைக்கப் பட்டிருந்தது என்று வால்மீகியே சொல்கிறான். அரசாட்சி மற்றும் நாட்டுப் பரிபாலனத்திலிருந்து இராமன் முற்றிலும் தன்னை விடுவித்துக் கொண்டிருக்கிறான்.
இராமன் அரியணை ஏறிய பின் அவனு-டைய அன்றாட நடவடிக்கைகளை மிகக் குறிப்பாகவும் தெளிவாகவும் வால்மீகி குறிப்பிடுகிறான். அதன்படி இராமனின் வாழ்வில் ஒரு நாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்பு வரை ஒரு பகுதி என்றும், நண்பகலுக்குப் பின் வேறொரு பகுதி என்றும் வரையறுக்கப்-பட்டது. காலை முதல் நண்பகல் வரை இராமன் மத ஆச்சாரங்கள் மற்றும் சடங்கு-களை நிறைவேற்றுவதிலும், பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான். நண்பகலுக்குப் பின் அரசவைக் கோமாளி-களுடன் அந்தப்புரப் பெண்களுடனும் மாறி மாறித் தன் நேரத்தைக் கழித்தான். அந்தப்புரப் பெண்களுடன் கூடிக்களித்து அயர்ந்திட்டால் கோமாளிகளுடன் பேசிக் கழிப்பான். கோமாளி-களுடன் பேசிக் களைப்புற்றால் அந்தப்புரப் பெண்களை நோக்கி ஓடுவான் (உத்தர-காண்டம், சரகம் 43, சுலோகம் 1) இராமன் அந்தப்புரப் பெண்களோடு அனு-பவித்த களியாட்டங்களை வால்மீகியும், மிக விசாலமாகவே விவரிக்கிறான். அசோகவனம் எனும் அழகிய பூங்காவில் இந்த அந்தப்புரம் இருந்தது. அங்குதான் இராமன் சாப்பிடுவது வழக்கம். இராமனின் உணவில் அருஞ்சுவைப் பொருட்கள் அனைத்தும் இடம் பெற்றன. மது, மாமிசம், பழவகைகள் அனைத்தும் உட்பட. இராமன் மதுவை அறவே தொடாத-வன் அல்ல. இராமன் அளவுக்கு அதிகமாகவே குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தான். அப்படிக் குடித்துவிட்டு அவன் போடும் கூத்தாட்டத்தில் சீதையையும் கலந்து கொள்ளச் செய்தான். (உத்தரகாண்டம்:சரகம் 42. சுலோகம் 8) என வால்மீகி குறிப்பிடுகிறான். அந்தப்புரப் பெண்களுடன் இராமன் வாழ்ந்து கழித்ததாய் வால்மீகி சொல்லும் விவரங்கள் அற்பமான-தல்ல. அந்தப்புரத்தில் இயல், இசை, நாட்டியத்-தில் புகழ்பெற்ற கிண்ணரி, உதமா மற்றும் அப்சரசுகள் போன்ற பேரழகிகள் இருந்தனர். போதாதென்று நாட்டின் பல பகுதிகளி-லிருந்தும் பெண்ணழகிகள் எல்லாம் அந்த அந்தப்புரத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். இப்படிப் பட்ட அழகிகளின் மத்தியில் இராமன் குடித்து கூத்தாடி கலந்து மகிழ்ந்து களிப்புற்றுக் கிடந்தான். அப்பெண்கள் எல்லாம் இராமனை மகிழ்விக்கப் பெரும்பாடு-பட்டனர். பதிலாக இராமன் அப்பெண்களுக்கு மாலை அணிவிப்பானாம், வஞ்சியரின் வளையத்துள் கிடந்த ஆடவருள் இளவரசன் இராமன் முதல்வன் என்கிறான் வால்மீகி. இவைகளெல்லாம் இராமனின் ஒரு நாள் நிகழ்ச்சிகளே அல்ல. இராமனுடைய வாழ்வின் அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளே இவை-களாகும். நாட்டு நிர்வாகத்தில் இராமன் எப்போதும் பங்கேற்றதில்லை என்பதை ஏற்கனவே குறிப்பிட்டோம். நாட்டு மக்களின் குறைகேட்டு நிவர்த்தி செய்கிற பழங்கால மன்னர்களின் பழக்கத்தைக்கூட இராமன் ஒரு போதும் கடைபிடிக்கவில்லை. தம்மக்கள் குறைகளை ஏதோ ஒரு தடவை இராமன் நேரில் கேட்டதாக வால்மீகி ஒரு சந்தர்ப்-பத்தைக் குறிப்பிடுகிறான். அதுவும் ஒரு துயர-மான நிகழ்ச்சியாய்த் தெரிகிறது. அக்குறையைத் தாமே தீர்த்திடுவதாய்ப் பொறுப்பேற்கிறான் இராமன். அப்படிச் செய்கையில் வரலாறு காணாத கடுங்கொடிய குற்றத்தைச் செய்கிறான் இராமன். அதுவே சூத்திரனான சம்புகனின் படுகொலை நிகழ்ச்சியாகும்.

இராமனுடைய ஆட்சிக் காலத்தில் அவனுடைய மக்கள் யாரும் அகால மரணம் அடையவில்லை என்கிறான் வால்மீகி. இருந்த போதிலும் ஓர் பார்ப்பானின் பையன் ஒருவன் அகால மரணமடைந்ததாய்ச் சொல்லப்-படுகிறது. மகனைப் பறிகொடுத்த தந்தை தன் பிள்ளையின் பிணத்தைத் தூக்கிக்கொண்டு இராமனின் அரண்மனையை நோக்கிப் போனான். அரண்மனையின் வாசலில் பிணத்-தைக் கிடத்திவிட்டுக் கதறி அழுதான். தன் பிள்ளையின் சாவுக்கு இராமனை நிந்தித்தான். மன்னனின் ஆட்சியில் படிந்திட்ட மாசுதான் மகனின் மரணத்திற்ககுக் காரணம் என்றான். அக்குற்றத்தை அறிந்து தண்டிக்காவிட்டால் மன்னன் இராமனே குற்றவாளி என்றான். மனம் போனபடி பழித்தான்; சபித்தான். குற்ற-வாளியைப் பிடித்துத் தண்டித்துச் செத்துப்-போன தன் மகனைப் பிழைக்கச் செய்யா-விட்டால் அரண்மனை வாசலிலேயே பட்டி-னிப் போர் (உண்ணாவிரதம்) நடத்தித் தற்-கொலை செய்துகொள்வேன் என அச்சுறுத்-தினான். நாரதன் உட்பட அறிவார்ந்த எட்டு ரிஷிகளுடன் இராமன் கலந்தாலோசித்தான். அந்த அறிஞர்களின் ஆலோசனைக் கூட்டத்-தில்-நாட்டு மக்களுள் அதாவது இராம இராஜ்யத்தில் யாரோ சூத்திரன் ஒருவன் தவம் செய்து கொண்டிருப்பதாகவும், அச்செயல் தருமத்திற்கு எதிரானது என்றும் நாரதன் சொன்னான். இந்து (புனித) சட்டங்களின்படி பார்ப்பான்கள் மட்டுமே தவம் செய்யலாம். பார்ப்பான்களுக்குச் சேவகம் செய்வதே சூத்திரர்களுடைய கடமை என்றும் மேலும், நாரதன் அடுக்கினான். தருமத்திற்கு எதிராய் ஒரு சூத்திரன் தவம் செய்வது பெரும்பாவம். குற்றம் என்றும் இராமன் திடமாய் நம்பினான். உடனே தன் தேரில் ஏறி நாட்டைச் சுற்றித் துருவி அக்குற்றவாளியைப் பிடித்துவரப் புறப்பட்டான். இறுதியில் நாட்டின் தெற்கே அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒரு மனிதன் கடினமான தவத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டான். இராமன் அவனை நோக்கிப் போனான். தவத்தை மேற்கொண்டிருக் கிறவன் யார் என்று கூட விசாரிக்க வில்லை. தவத்தில் ஆழ்ந்திருந்தவனோ சம்புகன் என்ற சூத்திரன். மோட்சத்தை அடையும் நோக்கத்துடன் தவம் செய்து கொண்டிருந்தான். விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை-நியாயத்தை அறிந்-திடும் நோக்கமோ இன்றிச் சம்புகனின் தலை-யைச் சீவிவிட்டான் இராமன். இராமனின் காரியத்தைப் பார்த்தீர்களா? அதே நொடியில் எங்கோ தொலைதூரத்து அயோத்தியில் அகால மரணமடைந்த அப்பார்ப்பானின் பிள்ளை மீண்டும் உயிர் பெற்றானாம். கடவுள்க-ளெல்லாம் மன்னன் இராமன் மீது மலர் தூவி மகிழ்ந்தார்களாம். தவம் செய்து மோட்சத்தை அடைய தமக்கே உள்ள உரிமையை அதற்கு அருகதையற்ற சூத்திரன் ஒருவன் மேற்கொண்டிருந்ததைத் தடுத்துத் தண்டித்துச் சம்புகனைக் கொலை செய்த மன்னன் இராமனின் செய்கைக்காக அவர்கள் மகிழ்ந்தார்கள். கடவுள்கள், தேவர்கள் எல்லாம் இராமன் முன் தோன்றி அவன் செய்த இந்நற்காரியத்திற்காக அவனைப் பாராட்டி-னார்கள். அயோத்தி அரண்மனை வாசலில் பிணமாய்க் கிடந்த பார்ப்பான் பையனை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று கடவுள்களிடம் இராமன் ஆராதித்தான்-அந்த பார்ப்பான் பையன் எப்போதோ உயிர்பெற்று எழுந்து விட்டான், என்று அவர்கள் இராமனுக்குச் சொல்லிவிட்டு மறைந்து போயி-னர். அதற்குப் பின் இராமன் அருகிலிருந்த அகத்திய முனிவனின் ஆசிரமத்திற்குப் போனான். சம்புகனைக் கொன்ற நற்செயலைப் பாராட்டி தெய்வ மகிமையுள்ள காப்பு ஒன்றை அகத்தியன் இராமனுக்குப் பரிசாய் அளித்தான். பிறகு இராமன் அயோத்தியை அடைந்தான். இவன் தான் ராஜாராமன்!.


தமிழன் ஒருவன் கொல்லப்பட்ட தீபாவளி நாளை தமிழர்களே கொண்டாடுவதா? – நக்கீரன்

ஜனவரி 30, 2010

தமிழர்கள் ஒரு ஆண்டில் மூன்று விழாக்களை முக்கியமாகக் கொண்டாடுகிறார்கள். பொங்கல், புத்தாண்டு, தீபாவளி ஆகியவையே அந்த மூன்று விழாக்கள் ஆகும்.

பொங்கல் உழவர் திருநாள். தமிழர்களுக்கே சொந்தமான விழா. வயலை உழுது, பண்படுத்தி, விதைத்து, களை எடுத்து, நெல் விளைந்தபோது அதனை அறுவடை செய்ததன் பின்னர், அந்த அறுவடையை கொண்டாடி மகிழவும், கமம் விளைந்ததற்கு இயற்கைக்கு நன்றி தெரிவிக்கவும், உழவன் புதுப் பானையில் புத்தரிசி, பால், வெல்லம், பாகு, பருப்பு இட்டுப் பொங்கி அதனை ஞாயிற்றுக்குப் படைத்தான். அடுத்த நாள் அவனுக்கு எல்லாவிதத்திலும் பயன் கொடுக்கும் மாடுகளுக்குப் பட்டிப் பொங்கல் எடுத்து மகிழ்ந்தான். இந்த விழாவில் பொருள் இருக்கிறது.

அது போலவே புத்தாண்டும் ஓரளவு வானியல், புவியியல் தொடர்பு பட்டது. ஞாயிறு சித்திரைத் திங்கள் 13 – 14ல் மேடராசியில் புகும் காலமே புத்தாண்டு பிறக்கிறது. இது தமிழர்களுடைய புத்தாண்டு அல்ல. இந்துக்களது புத்தாண்டு. காரணம் அறுபது ஆண்டுகளின் பெயர்களில் ஒன்றேனும் தமிழில்லை. எல்லாமே வடமொழிப் பெயர்கள் ஆகும்.

ஆனால் தீபாவளியை ஏன் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள் என்பது விளங்கவில்லை. தீபாவளியைப் பற்றி பல கதைகள் உண்டு. வடநாட்டவரைப் பொறுத்தளவில் (குஜராத்திகள், மார்வாரிகள்) தீபாவளி இலக்குமிக்கு உரிய நாள். அவர்களது புத்தாண்டின் தொடக்க நாள். வணிகர்கள் புதுக் கணக்கை அந்த நாளில்தான் தொடங்குகிறார்கள். வங்காளிகள் தீபாவளியை காளி அல்லது துர்க்கைக்குரிய நாளாகக் கொண்டாடுகிறார்கள். இன்னும் சில இனத்தவருக்கு தீபாவளி நாள் இராமன் வனவாசம் முடித்து அயோத்திக்குத் திரும்பிய நாள். தமழர்களைப் பொறுத்தளவில் தீபாவளி நாள் நரகாசுரன் என்ற அசுரன் கொல்லப்பட்ட நாள். இது பற்றிய புராணக் கதை என்ன சொல்கிறது?

நரகாசுரன் பூமாதேவியின் பிள்ளை. காமரூப நாட்டின் மன்னன். படைப்புக் கடவுளான பிரமாவை நோக்கி கடும் தவம் செய்து பல வரங்களைப் பெறுகிறான். அதன் பின் தேவர்களை அவன் துன்புறுத்துகிறான். துன்பத்தைப் பொறுக்க முடியாத தேவர்கள் வைகுண்டத்தில் திருமாலிடம் சென்று முறையிடுகிறார்கள். திருமால் வழக்கம் போல் தேவர்களைக் காக்க திருவுள்ளம் கொள்கிறார்.

ஆனால் நரகாசுரனை கொல்வது திருமாலுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. காரணம் நரகாசுரமன் தனது தாயின் கையால் அல்லாது வேறுயாராலும் கொல்ல முடியாதபடி ஏற்கனவே பிரமாவிடம் வரம் வாங்கி விட்டான். உடனே காத்தல் கடவுளான திருமால் பெரிய சதித் திட்டம் தீட்டுகிறார். தனது தேர்ச்சாரதியாக இரண்டாவது மனைவியான சத்தியபாமாவை (பூமாதேவியின் மறுஅவதாரம்) அமர்த்துகிறார். நரகாசுரனோடு நடக்கும் சண்டையின் நடுவில் அம்பு ஒன்று அவரைத் துளைக்கிறது. உடனே திருமால் மூர்ச்சை போட்டு விழுந்து விடுகிறார். உண்மையில் அப்படி அவர் மூர்ச்சைபோட்டு விழவில்லை. எல்லாம் நடிப்பு. இதனை விளங்கிக் கொள்ளாத சத்தியபாமா தனது கணவன் உண்மையிலேயே மூர்ச்சையாகி இறந்து விட்டார் என நினைத்து திருமாலின் வில்லை எடுத்து நரகாசுரன் மீது அம்பு எய்தி அவனைக் கொன்று விடுகிறார்.

உயிர் போகும் தருவாயில் நரகாசுரனிடம் உனது கடைசி ஆசை என்ன? என்று சத்தியபாமா கேட்கிறார். ”எனது மறைந்த நாளை மக்கள் எல்லோரும் கொண்டாட வேண்டும்”” என்கிறான் நரகாசுரன்.

தனது எதிரியைக் கொல்வதற்கு குறுக்கு வழியில் சூழ்ச்சி செய்கின்ற ஒருவரை கடவுள் என்று அழைக்க முடியுமா? ஆனால் புராணிகர்கள் அப்படித்தான் ‘பரம்பொருளைச்’ சித்தரித்திருக்கிறார்கள்.

எந்தப் புராணத்தை எடுத்துப் பார்த்தாலும் இந்த அசுரர்கள் தேவர்களைக் கொடுமை செய்ததாகவும்;, தேவர்களை மீட்கக் கடவுள் அவதாரம் செய்ததாகவும் சொல்கின்றன. இவையெல்லாம் அன்றைய ஆரிய – திராவிட இனங்களுக்கு இடையிலான போரையே குறிக்கும்.

சுரர் என்றால் குடிப்பவர் என்று பொருள். அசுரர் என்றால் குடியாதவர் என்று பொருள். ஆரியர் சோமபானம் குடித்ததாக இருக்கு வேதம் சொல்கிறது. சோமச் செடியை தெய்வமாகமே கும்பிட்டார்கள். வேள்வி செய்து அதில் குதிரை, மாடு, ஆடு, உடும்பு போன்றவற்றை வேக வைத்து அதனை ஆரியர்கள் ‘அவிர்ப்பாகம்’ என்று சொல்லி உண்டு மகிழ்ந்தார்கள்.

ஆனால் சோமபானம், சுரபானம் குடித்த ஆரியர் உயர்ந்தவர்களாகச் சித்தரிக்கப்பட்டார்கள். குதிரை, மாடு இவற்றைக் கொன்று சாப்பிட்டவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவற்றை அன்பு, அருள், காருண்யம், ஒழுக்கம் காரணமாக வெறுத்து ஒதுக்கியவர்கள் அசுரர்கள் என்று இழித்துரைக்கப் பட்டார்கள்.

மகாவிட்ணுவின் அவதாரங்களுள் பரசுராமன் அவதாரம் என்பது முழுக்க முழுக்க அசுரர்களை கொன்றொழித்த கதைதான். பூலோகத்தில் அசுரர்கள் செய்துவரும் கொடுமைகளினால் பூமிதேவி பாரம் தாங்க முடியாமல் தனது கணவன் விட்ணுவிடம் முறையிட்டாள். உடனே “பூமியில் அவதாரம் செய்து பூமிபாரத்தைத் தீர்த்து வைப்பேன்” என்று கூறி தக்னி முனிவருக்கும் அவரது பத்தினி ரேணுகைக்கும் பரசுராமனாகப் பிறக்கிறார் விட்ணு.

தந்தை கட்டளைப்படி பரசுராமன் தனது தாயையும் உடன் பிறந்த சகோதரனையும் கொன்று பெரிய ‘வீரன்” என்று பெயர் எடுக்கிறான். காமதேனு என்னும் பசுவை கார்த்தவீரியார்ச்சுனன் என்னும் அரசன் கவர்ந்து செல்கிறான். அதைச் சாக்கிட்டு அந்த அரசனையும் பூலோகத்தில் இருந்த சத்திரியர்களையும் (அசுரர்களை) ஒரு காலத்திலும் தலைதூக்காதபடி கோடரியால் வெட்டிக் கொன்று பூமிபாரத்தைத் தீர்த்தான்.

தாயைக் கொன்றவன், உடன்பிறப்பைக் கொன்றவன், அசுரர்களைக் கொன்றவன் எப்படி கடவுள் அவதாரமாக இருக்க முடியும்? இந்த அவதாரத்திடம் இருந்து பக்தர்கள் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன? யாரோ ஒரு அரசன் தவறு செய்தான் என்பதற்காக எல்லா அரசர்களையும் பூண்டோடு அழிப்பது எந்தவகை தர்மம்? பூலோகத்தில் அரசனாக ஆண்டவர்கள் எல்லாம் அசுரர்கள் என்பதுதான் இதற்குக் காரணமா?

இராம – இராவண யுத்தம் ஆரிய – திராவிடர் இருசாராருக்கும் இடையிலான மோதல்தான். இப்படி நேரு தான் எழுதிய னுளைஉழஎநசல ழக ஐனெயை என்ற நூலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இராமன் அரக்கர்களைக் கொல்லுவதற்கென்றே காட்டிற்கு வந்ததாகவும் அரக்கர்களைக் கொன்று ஒழிப்பதாக வாக்குக் கொடுத்து விட்டுக் காட்டிற்கு வந்ததாவும் சொல்கிறான் (ஆரண்ய காண்டம், 10வது சருக்கம்).

“தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியது அன்று, தீபாவளிப் பண்டிகை புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் கொலைக்காக தமிழர் மகிழ்ச்சி அடைதல் நன்று அன்று””
என்று தமிழ்ப் பெரும் புலவர், பேராசிரியர் சைவப் பெரியார் கா.சுப்பிரமணிய(ன்) பிள்ளை தாமெழுதிய ‘தமிழர் சமயம்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

“தீபாவளி என்பது வடநாட்டு மார்வாரிகளும், குஜராத்திகளும் கொண்டாடும் புதுக்கணக்கு புத்தாண்டுப் பிறப்பு விழா. தீபாவளிக்கும் தமிழர்க்கும், தீபாவளிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை”” எனப் பேராசிரியர் சைவப்பெரியார் அ.கி. பரந்தாமனார் தாமெழுதிய “மதுரை நாயக்கமன்னர் கால வரலாறு”” என்னும் நூலில் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

“தீபாவளி சமணசமயப் பண்டிகை. பாவாபுரி நகரிலே அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த வர்த்தமான மகாவீரர் இறந்த விடியற்கால தினமே தீபாவளியாகும். தீபாவளி பற்றிய வரலாற்றுக்கும் நரகாசுரன் புராணக் கதைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. தீபாவளி என்பதன் பொருள் விளக்கு வரிசை” (தீபம் – விளக்கு, ஆவலி – வரிசை )
என்று அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய “சமணமும் தமிழும்”” என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

“ஆரியப் பார்ப்பனர்கள் கட்டுவித்த கற்பனைக் கதையே தீபாவளி”
என்று சைவத் தமிழ் பெரியார் மறைமலை அடிகள் தான் எழுதிய “தமிழர் மதம்”” என்ற நூலில் எழுதியுள்ளார். மேலும் அவர் –

“ஆரியரின் இந்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன்-இராவணனன் மதலான நிகரற்த தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படுவராயினர்”
(வேளாளர் நாகரிகம் – பக்கம் 60).

“”மறைமலை அடிகள் தமிழர், அதிலும் தனித் தமிழ் வெறியர் அவர் அப்படித்தான் எழுதுவார்”” என்று சிலர் சொல்லக் கூடும். அவர்களுக்காக இதோ இராமகிருஷ்ண பரமகம்சரின் சீடர் சுவாமி விவேகானந்தர் சொல்லியிருப்பதைத் தருகிறேன் படியுங்கள்.

தென்னிந்தியாவில் இருந்த மக்களே இராமாயாணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
(இராமாயணச் சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் பக்கம் 587-589)

இவ்வாறு நடைமுறை உண்மைக்கும் வாழ்வியல் நடைமுறைக்கும் ஒத்துவராத, முரண்பட்டு இருக்கிற பொய்களை, கலையுரைத்த கற்பனைகளை எல்லாம் மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் தமிழர்களைத் தாழ்வுபடுத்தும் இந்தத் தீபாவளியை இன்னும் எத்தனை காலத்துக்குத் தமிழர்கள் செக்குமாடுகள் போல் கொண்டாடிக் கொண்டு இருக்கப் போகிறார்கள்?

தமிழ் மக்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே படுக்கிறார்கள்,

ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு,

உயர்ந்த தமிழன் மருந்துக்கும் அகப்பட மாட்டான்.

தீபாவளி கொண்டாடும் தமிழர்கள் மகாகவி பாரதியாரின் ஏக்கத்தைப் போக்க முன்வர வேண்டும்