கோயில்கள் ஏற்பட்டது எப்படி?

ஜனவரி 30, 2010

உலகில் எங்கும் இருப்பதைவிட இந்தியாவில்தான் அதிகமான ஆலயங்கள் இருக்கின்றன. இந்தியா முழுமைக்கும் பார்த்தால் தமிழ்நாட்டில் தான் அதிகமான பெரிய ஆலயங்கள் (கோயில்கள்) இருக்கின்றன.

இந்தப்படி அதிகமான பெரிய ஆலயங்கள் கட்டப்பட்டிருப்பவையெல்லாம்
பெரியதும் அக்கால அரசாங்க அரசர்களாலேயே கட்டப்பட்டவையாகும்.

இதற்குக் காரணம் என்னவென்றால், அக்காலத்தில் இந்த ஆலயங்கள் மூலம் அரசாங்கத்திற்குப் பணம் (நிதி) வருவாய்க்கு வழி செய்து கொள்ளும் ஏற்பாடு இருந்திருக்கிறது என்பதுதான்.

எதுபோலென்றால், சுமார் 40, 50-ஆண்டுகளுக்கு முன் வரையில் அரசாங்க நிதி (வரி) வசூலுக்கு அரசாங்கமே மதுக்கடைகளை ஏற்பாடு செய்து, அதை வியாபாரம் போல் செய்து பணம் சம்பாதித்து வரி நிதியோடு சேர்த்து வந்தது போலவேயாகும். அதனாலேயே கோவில் கட்டுவது என்பதை அரசாங்கத்திற்கே உரிமையாக வைத்துக் கொள்ளப்பட்டிருந்ததுடன், அரசாங்க அனுமதியில்லாமல் யாரும் கோவில் கட்டக்கூடாது என்கிற நிபந்தனையும் இருந்து வந்திருக்கிறது. இதற்கு அதாரம் நம் தேசத்தில் சுதேச சமஸ்தானங்கள் இருக்கும் வரை அந்த “அரசாங்க அனுமதியில்லாமல் யாரும் எந்த கோவிலையும் கட்டக்கூடாது” என்ற நிபந்தனை இருந்து வந்திருப்பதேயாகும்.

சுமார் 2000-ஆண்டுகளுக்கு முன் சாணக்கியர் என்ற ஒரு பார்ப்பனர் பொருளாதார நிபுணராக இருந்தார். அவர் உண்டாக்கிய அர்த்த சாஸ்திரம் என்னும் நீதி நூலில் இதைப்பற்றி விளக்கியுள்ளார். இந்த சாணக்கிய அர்த்த சாஸ்திரம் என்னும் நூலானது மனுதர்ம சாஸ்திரம், யாக்ஞ், வல்கியர், ஸ்மிருதி ஆகிய நூல்களுக்கும் முன்பு தோன்றியதாக ஆராய்ச்சியாளரின் முடிவு. இதிலிருந்து மனு, யாக்ஞவல்கியர் முதலிய நீதி நூல்களின் ஆயுள் சுமார் 2000-ஆண்டுகளுக்கு உட்பட்டதென்றே தெரிகிறது.

இந்த சாணக்கிய அர்த்த சாஸ்திரத்தில் மத சம்பந்தமான ஸ்தாபனங்களை மேற்பார்வைச் செய்யும் அரசாங்க அதிகாரி நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள ஆலயங்களுக்குச் சொந்தமான சொத்துக்களில் வரும்படிகளையும், கோவில்களுக்கு பக்தர்களிடமிருந்து பணமாக வசூலித்து, அந்தப்படி வசூலிக்கப்படும் பணத்தையும், அரசாங்க வருவாய் நிதியுடன் சேர்க்க வேண்டும் என்ற விதிகள் இருந்திருக்கின்றன.

அரசாங்கத்திற்குப் புதிய வருவாய்த் திட்டங்களாக மக்களை ஏமாற்றி வசூலிக்கப் பல திட்டங்கள் இருந்தன.

ஒரு இரவில் பொது மக்கள் யாருக்கும் தெரியாமல் ஒரு கடவுளை அல்லது மேடையை ஏற்படுத்தி, அதைத் தானாகத் தோன்றியது என்று விளம்பரப்படுத்தி அதை வணங்கினால் பல கெடுதிகள், வியாதிகள் விலகுமென்று கூறி, திருவிழாக்கள் முதலியன நடத்தி, அதன் மூலம் பணம் சம்பாதித்து பொக்கிஷத்தில் சேர்க்க வேண்டியது.

அரசாங்க ஒற்றர்களை விட்டு ஒரு மரத்தில் பிசாசு, முனி இருப்பதாகப்பொது மக்களிடம் பயத்தை ஏற்படுத்தி விட வேண்டும். பிறகு இதை விரட்டவும், திருப்தி செய்யவும், பெரிய சாந்தி விழா நடத்தி பெருந்தொகை வசூலித்து பொக்கிஷத்திற்குச் சேர்த்துவிட வேண்டும்.

அரசரது ஒற்றர்கள் சந்நியாசி மாதிரி வேடம் பூண்டு இந்தத் தந்திரத்தைச் செய்து பணத்தை வசூலிக்க வேண்டியது. இவற்றால் பிசாசு நகரத்தை விட்டுப் போய் விடுகிறது. பணம் அரசரது பொக்கிஷத்திற்குச் சேருகிறது. அந்த காலத்தில் அரசனுக்குப் பணம் தேடிக் கொடுக்கும் வேலை அதிகாரிகளுக்கும் கடுமையான வேலையாகவே இருந்திருக்க வேண்டும்.

மற்றும், பாம்பைக் காட்டி பணம் பறிக்கும் தந்திரம் இதைவிட விசித்திரமானது. இது இன்றுங்கூட சிறிது மாற்றத்துடன் ஒரு கோவிலிலாவது இருந்து வருவதாகத் தெரிகிறது. சாணக்கியர் காலத்தில் தீர்த்தம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்குமென்பதை எளிதாக உணர்ந்து கொள்ளலாம்.

சாதாரணமாக எளிதில் இவ்விஷயங்களை நம்பாத மக்களிடத்தில் தான் இந்தத் தீர்த்தம் உபயோகிக்கப்பட்டது. இதை அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் மருந்தாக உபயோகித்தார்கள். ஆனால், இந்தத் தந்திரங்களையெல்லாம்
அரசர்களுடைய காரியத்திற்காக உபயோகித்தார்களேயன்றி, இன்று நடப்பதுபோல் ஒரு சிலருடைய சுயநல வாழ்வுக்காகவன்று என்பதை ஞாபகத்திலிருத்திக் கொள்ள வேண்டும். தந்திரம் இரண்டும் ஒன்றுதான்.

“பார்ப்பான் தன்னலத்தையும், ஆதாயத்தையும் கருதி கோவில்களில் ஏமாற்றிப் பணம் பறிக்க எவ்விதத் தந்திரத்தையும் உபயோகிப்பான்” என்று பிரஞ்சு பாதிரியாரான கற்றறிந்த ´ஆபி டூபாய்´ ஒரு நூற்றாண்டுக்கு முன் எழுதியிருக்கிறார்.

மேலும், சாணக்கியர் கூறுவதாவது:

“அரசனது தோட்டத்தில் ஏதாவது ஒரு மரம் பால் வடித்தாலாவது அல்லது அகலமாகப் பூக்கவோ, காய்க்கவோ செய்திருந்தாலாவது அதில் கடவுள் தோன்றியிருக்கிறார் என்று பொது ஜனங்களிடம் காட்டி, பிரசித்தப்படுத்த வேண்டும்.”

“அல்லது ஒரு கிணற்றில் அநேக தலைகளையுடைய பாம்பு ஒன்று இருப்பதாகச் சொல்லி அதைப் பார்க்க வருபவர்களிடமிருந்து ஒற்றர்கள் பணம் வசூலிக்கலாம்.”

“ஒரு பாம்பு விக்கிரகத்தில் துவாரமிட்டோ அல்லது கோவிலின் இருட்டு மூலையிலோ அல்லது ஏதாவது பொந்திலோ பசியால் வாடிக் கிடக்கும் பாம்பு ஒன்றை வைத்து ஜனங்களைப் பார்க்கச் சொல்லி பணம் வசூலிக்கலாம்.”

“இம்மாதிரி தந்திரங்களை எளிதில் நம்பாத ஜனங்களுக்கு மயக்க மருந்து கலந்த நீரைத் தீர்த்தமென்றும், பிரசாதமென்றும் சொல்லி, குடிக்கும்படிச் செய்து அவர்கள் குடித்து மயங்கியவுடன் அதற்குக் கடவுள் கோபம் என்றும் என்றும் சொல்ல வேண்டியது. அல்லது தாழ்ந்த ஜாதியானொருவனைப் பாம்பு கடிக்கும்படிச் செய்து, இம்மாதிரி துர்சகுணம் நேரிடாது தடுக்கப் போவதாகப் பாசாங்கு செய்து ஒற்றர்கள் பணம் வசூலிக்கலாம்.”

“தெய்வங்களுக்குச் சமர்ப்பிக்கப்படும் காணிக்கைகள் அரசனது பொக்கிஷத்தைச் சேர வேண்டும். அரசனது செலவுக்காக அரசன் வாழும் பொருட்டு பணம் வசூலிக்க ஒரே இரவில் தேவதைகளையும், பீடங்களையும், ஸ்தாபித்து திருவிழாக்கள் நடத்த வேண்டும். காணிக்கைகளைப் பெறுவதற்காக அடிக்கடி கடவுள்கள் தோன்றும்படிச் செய்ய வேண்டும்.

சாதாரணமாக மிக வெளிப்படையான தந்திரங்கள்தான் அதிகமாகப் பலனை அளிக்கின்றது. கடவுள் தம் மூலம் பேசுவதாகப் பாசாங்கு செய்து பணம் திரட்டும் வழி முன் காலத்தில்தான் மற்ற நாட்டுப் புரோகிதர்களாலும் கையாளப்பட்டு வந்தது. ஆனால் இந்தியாவில் இன்றும் இவ்வழக்கம் ஒயவில்லை. இங்கு விக்கிரகங்களே பேசுகின்றன. இவற்றை வழிபடுகிறவர்கள் மிகக் கவனமாகக் கேட்டு பரவசமடைகிறார்கள். ஆனால், கல் விக்கிரகத்தின் உள்ளோ பக்கத்திலோ வஞ்சகன் ஒருவன் மறைந்திருந்து விக்கிரகத்தின் வாய் வழியாகப் பேசுகின்றான் என்பதை
இவர்கள் அறிவதில்லை” என்று ´ஆபே டூபாய்´ கூறுகின்றார். இவை போன்று இன்றளவும் கையாப்பட்டு வருகிற பலவிதத் தந்திரங்களையும் அவர் விரிவாக விளக்குகிறார்.

இனி நமது சாணக்கியரைக் கவனிப்போம். சாணக்கியர் காலத்தில் கோவில் வருவாயிலிருந்து ஒரு பைசாவாவது அரசனது பொக்கிஷத்தைச் சேர தவறி விட்டால் அந்த இடத்திலேயே கோவில் அதிகாரி ஏன் தூக்கிலிடப்பட்டிருப்பார் என்பதை நாம் மேற்சொன்னவற்றிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அது மிகவும் நியாயமே. ஏனெனில், அக்காலத்தில் விக்கிரகங்களும், பீடங்களும் அரசனது வியாபாரத்திற்காக ஏற்பட்டவைகளாகும். பொது ஜனங்களின் பணத்தைச் செலவிட்டே விக்கிரகங்களையும், பீடங்களையும், மடங்களையும் உண்டு பண்ணி பரிபாலித்து அவற்றைப் பற்றி பெரியதாக விளம்பரப்படுத்தியும் வந்தார்கள். இக்காலத்தில் அரசாங்கத்தார் எவ்வாறு பெரும் பொருள் செலவிட்டு மேட்டூர் தேக்கத்தையும், சுக்கூர் அணைக்கட்டையும் கட்டி அவற்றினின்றும் லாபத்தை எதிர்பார்க்கின்றார்களோ அதே போல முன்காலத்து அரசர்கள் கோவில்களையும், ஸ்தலங்களையும், உற்பத்தி செய்ததும் லாபத்தைக் கருதியோயாகும்.

இம்மாதிரி ´மத ஸ்தாபனங்களை´ ஏற்படுத்தி முற்கால மன்னர்களைச் சுற்றி விரோதிகள் எப்பொழுதும் இருந்து வந்ததால் இடைவிடாது யுத்தங்கள் நேரிட்டுக் கொண்டேயிருந்தன. இதற்காக அவர்கள் பெருஞ்சேனைகளை வைத்திருந்தனர். யுத்தங்களுக்கும், சேனைகளுக்கும் வேண்டிய பணத்திற்காக ஏராளமான வருவாய் தேவைப்பட்டது. கோவில் வருவாயைக் கொண்டு பார்ப்பனருக்கு மட்டும் சோறு போடுவது என்றிருந்தால் அரசும், கோவிலும் அன்றே மறைந்திருக்கும். இக்கோவில்களையும், பீடங்களையும், கடவுள்களையும் படைத்த அக்காலத்து அரசர்களுக்கு அரசாங்கத்தை நடத்தும் கஷ்டம் எவ்வளவு என்று தெரியும்.

உதாரணமாக பூரண மதுவிலக்கு ஏற்பட்டால் நாட்டில் உயர்தரக் கல்வியை நிறுத்த நேரிடுமென்று இன்று (இராஜாஜி முதலியவர்கள்) சொல்லுவது போல, தங்களது ஷேமமும் கோவில் வருமானத்தில் தொங்கிக் கிடந்தன என்பதை அக்கால அரசர்கள் அறிந்திருந்தார்கள். ஆதலால் அவர்கள் அதன் மீது மிகுந்த கவனம் செலுத்தி வந்தார்கள். இவ்வுலக சுக துக்கங்களைக் குறித்து அவர்கள் நினைத்தார்களேயன்றி மோட்சலோகத்தைப்பற்றி நினைக்கவில்லை. இக்காலத்து சுதேச மன்னர்களில் பெரும்பாலோர் யாதொரு பொறுப்பும் கவலையுமெடுக்காது மோட்சலோகத்தைப் பற்றி நினைக்கிறார்கள். பார்ப்பானை திருப்தி செய்தால் மோட்சத்துக்குச் சீட்டு கிடைத்துவிடுமென நம்புகிறார்கள். அங்ஙனம் செய்துவிட்டு தங்கள் ராஜ்ஜியங்களைவிட்டு தற்கால மோட்ச பூமியான பாரிஸ் முதலிய மேல்நாடுகளுக்குச் சென்றுவிடுவதுமுண்டு.

சர்தார் கே.எம். பணிக்கர் அவர்கள் “இந்திய சமஸ்தானங்களும், இந்திய அரசாங்கமும்” என்ற தனது புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகின்றார்.

“பல சிற்றரசர்கள் மிதமிஞ்சிய சுக போகங்களுடன் இழிவான வாழ்க்கை வாழ்வதற்குக் காரணம் அவர்கள் இராஜ்ஜிய பாரத்தில் நேராக பொறுப்பேற்று நடத்தாதயேயாகும். முன் காலங்களில் குடிகளைத் துன்புறுத்தும் கொடுங்கோல் மன்னனையும் தனது சுகமொன்றையே கருதும் துர் நடத்தைக்காரரையும் சும்மா விட்டு வைத்திருக்க மாட்டார்கள்.
வெளியிலிருந்தேற்படும் படையெடுப்போ அன்றி உள்நாட்டுக் கலகமோ அவனது வாழ்க்கையை முடித்துவிடும். ஆனால் இக்காலத்தில்
அப்படியல்ல. ஒரு அரசன் தான் பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு செய்து கொண்ட உடன்படிக்கையை மீறாதிருப்பதுவரையும் நாகரீக ஆசாரங்களை வெளிப்படையாக புறக்கணியாதிருப்பது வரையும் அவனுக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தார் ஆதரவிருக்கின்றது. அவன் தனது சுக போகங்களுக்காகத் தன் இஷ்டம் போல் பொக்கிஷத்தை உபயோகிக்கவும், குடிகளை கொள்ளையடிக்கவும் விட்டுவிடுகிறார்கள்.”

சர். தாமஸ் மன்ரோவின் அடியிற்கண்ட குறிப்புக்களையும் திரு பணிக்கர் அவர்கள் எடுத்துக் கூறுகிறார்கள்.

“இந்தியாவில் மோசமான ராஜ்ய பாரம் ஏற்படுமாயின் அரண்மனையில் புரட்சி உண்டு பண்ணியோ அல்லது உள்நாட்டுக் கலகத்தாலோ அதைச்
சரிபடுத்துவதுதான் வழக்கம். ஆனால், உள்நாட்டு வெளிநாட்டு விரோதிகளினின்றும் மன்னனைக் காப்பாற்ற பிரிட்டிஷ் படைகளிருப்பதால் அவ்விதம் கொடுங்கோன்மையைப் பரிகரிக்கும் வழியெதுவுமில்லாமற் போய்விடுகின்றது. தனது பாதுகாப்புக்கு அன்னியர் உதவியிருக்கிறதென்று நம்பிக்கையால் அவன் சோம்பேறியாய் விடுகின்றான். தனது குடிமக்களுடைய வெறுப்பு தன்னையொன்றுஞ் செய்ய முடியாதவனாகவும் பேராசை பிடித்தவனாகவும் ஆகிவிடுகின்றான்.”

கோவில்களிலிருந்து தனக்குப் பணம் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதொன்றையே அரசன் கவனிப்பான் என்பது இதுகாறும் எடுத்துக் காட்டியவற்றிலிருந்து விளங்கும். யார் கோவிலுக்குப் போய் வணங்கினார்கள்; யார் மதுவருந்தினார்கள் என்பதைப்பற்றியெல்லாம் அவன் கவனித்ததில்லை. இவர்கள் சண்டாளராகவும், சூத்திராகவும், வைசியராகவும், சத்திரியராகவும், பிராமணராகவும் இருக்கலாம். சண்டாளனாக விருந்தாலும் அவன் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகப் பணம் கொடுக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அரசனும் திருப்தியடைந்திருப்பான். பணம் வரும் என்று தெரிந்தால் அரசன் தனது விக்கிரகங்களையும், பீடங்களையும், ஸர்ப்பங்களையும் கொண்டு சண்டாளருக்கு விசேஷ வேடிக்கைகளையும் காட்டியிருப்பான். ஒரு சண்டாளன் தனது கோவிலுக்குள் நுழையவோ, விக்கிரகத்தையோ, பாம்பையோ, மரத்தையோ வணங்கவோ செய்யவொட்டாமல் ஓர்
வர்ணாசிரம தர்மி தடுப்பது நிமித்தம் தனது காதுக்கு எட்டினால் இம்மாதிரி தடை செய்பவர்கள் பார்ப்பனராக இருந்த போதிலும் இவர்களை சமீபத்திலிருக்கும் மரத்தில் கட்டி தூக்கியிருப்பான்.

அக்காலத்தில் இந்துக் கோவில்கள் அரசனுடைய வருவாய்க்கு அவ்வளவு தூரம் மூலகாரணமாயிருந்தன. ஆகவே எக்காரணத்தைக் காட்டியேனும் இவன் சண்டாளன்; இவன் தாழ்ந்த சாதி; ஆகையால் கோவிலுக்குள் போகவோ, வணங்கவோ கூடாதென்று யாரேனும் சொன்னால் அவன் அந்த இடத்திலேயே கொடிய குற்றஞ் செய்தவனாகக் கருதப்பட்டிருப்பான்.

கோவில்கள், அரசாங்க ஸ்தாபனங்களாகவிருந்தன; ஏதேனும் ஒரு ஸ்தாபனம் ´பொதுச் சொத்து´ என்று சொல்லக்கூடியதாக இருந்திருந்தால் அது இந்தக் கோவில்களாகும். இப்போது உயர் சாதி இந்து வக்கீல்கள் கோயில்களைப் பொது ஸ்தாபனங்கள் என்று சொல்லும் போது ஒரு புது மாதிரியான விசேஷ அர்த்தத்துடன் சொல்லுகின்றார்கள். பிரதம திருஷ்டியில் நான்கு சாதியாருக்கும் தட்டுத் தடையின்றி இக்கோயில்களில் பிரவேசித்து வழிபட உரிமையுண்டு என்பது இவர்கள் கூற்றாகும்.

“வேதங்களை அடிப்படையாகக் கொண்ட ஆரிய மதத்தில் விக்கிரக ஆராதனையில்லை. இது பின்னர் தோன்றிய இழிவுபட்ட ஆராதனையாகும்” என்று காலஞ்சென்ற மாக்ஸ்முல்லர் என்னும் உலகப் பிரசித்தி பெற்ற மேல்நாட்டு ஆசிரியர் கூறுகின்றார்.

வங்காள தேசத்து பிரபல வழக்கறிஞரான மிஸ்டர் ஜே.சி. கோஷ் தமது தாகூர் சட்டப் பிரசங்கத்தில் அடியில் வருமாறு குறிப்பிடுகிறார்.

மக்கள் யாகம் முதலியவற்றை நடத்தி வந்த காலத்தில் கோயில்களையும், விக்கிரகங்களையும் ஸ்தாபிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. பிராமணர்கள் மட்டுமே அக்கினியை வளர்க்கலாம். அதனால் அவர்களை அக்கினி ஹோத்திரிகள் என்றழைத்தார்கள். மற்ற சாதியாரும் உயர்ந்த போது அவர்கள் வழிபடத் தெய்வங்கள் வேண்டியதாயிற்று. பிராமணரது ஆதிக்கம் குறையவும், அக்கினி வணக்கம் தனது செல்வாக்கையிழந்தது. இதிலிருந்து விக்கிரக வணக்கம் ஆரம்பமாயிற்று. மற்றும் புத்த விக்கிரகங்களையும், ஸ்தூபிகளையும் ஸ்தாபித்து புத்த மதத்தினர் வழிபட வாரம்பித்தது இந்துக் கோயில்களையும், விக்கிரகங்களையும் ஸ்தாபிப்பதற்கு வழிகோலியாயிற்று.

விக்கிரகங்களையும், கோயில்களையும் ஏற்படுத்தியபோது அவற்றைப்
பரிபாலிக்க சொத்துக்களை விட வேண்டியதும் அவசியமாயிற்று! எனவே நிலங்களை விட்டதுமன்றி, பல பழைய கோவில்களில் மக்களை ஈர்க்க (அடிமைப் பெண்களையும்) தாசிகளையும் விட்டார்கள். இதிலிருந்து இந்தியாவில் எந்த நோக்கத்துடன் விக்கிரக ஆராதனை ஆரம்பிக்கப்பட்டது என்பது புலனாகும். இப்பொழுது ஒவ்வொரு கோயிலிலும் நடன சாலை இருப்பதாகவே கருதப்படுகிறது என்று மிஸ்டர் கோஷ் சொல்கிறார்.

பண்டைக்காலத்தில் இக்காலத்திலிருப்பது போலவே கோவில்கள் வேடிக்கை விநோத ஸ்தலங்களாகவே இருந்து வந்தன. இவ்வுத்தேசத்துடன் தான் அக்கால அரசர்களும் ஆலயங்களை ஏற்படுத்தியிருந்தார்கள். எனவே இந்நாட்டிலிருக்கும் பல கோயில்கள் வேசியர் விடுதிகளைவிடச் சிறந்தவையல்லவென்று காந்தியார் குறிப்பிட்டது சரித்திரப்படியும் மிகையாகாது. இந்நோக்கத்துடனேயே ஆலயங்களை ஸ்தாபித்தார்கள் என்பது சரித்திரப் பூர்வமாக உண்மையாகும்.

– (1970-ம் ஆண்டில் வெளியான தந்தை பெரியார் அவர்களின் 92-வது பிறந்த நாள் விழா மலரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை)


கண்ணகி கதை இலக்கியமா ? -தந்தை பெரியார்

ஜனவரி 30, 2010

[இக் கட்டுரையில் கண்ணகி, கற்பு, பத்தினிப் பெண்கள் பற்றிய பெரியாரின் கருத்துகள் இடம் பெறுகின்றன. ‘பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், 50 ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை – 600007 ‘ வெளியிட்டுள்ள ‘பெரியார் களஞ்சியம் ‘ நூல் வரிசையின் ஆறாம் தொகுதியில் வெளிவந்துள்ள கட்டுரை இது. – தட்டச்சு செய்தவர்:ஆசாரகீனன்]

கண்ணகி சினிமாவை பார்த்தேன். அதன் பிறகு அந்தக் கதையைப் பார்த்தேன். பழந் தமிழர் பெருமைக்கு இந்தக் கதையா ஆதாரம் என்கின்ற ஆத்திரம்தான் வந்தது. இதைப் போன்ற முட்டாள்தனமான கதை ஆரியப் புராணங்கள் ஆகியவற்றிலும் இல்லை என்பது எனது அபிப்பிராயம். இந்தக் கதை ஓர் இலக்கியமாக இருப்பது தமிழர்களின் மானக்கேடுதான்.

கண்ணகி, கண்ணகி கால மக்கள் நிலை, கண்ணகி கால அரசர்கள் தன்மை, கண்ணகி காலக் கற்பு, கண்ணகி காலத் தெய்வங்கள் முதலியவை எல்லாம் ‘பண்டைத் தமிழரின் தன்மையை விளக்குகின்றன ‘ என்றால் நாம் ஆரியர்களுக்குச் சூத்திரராய் இருப்பது மேலான காரியமாகும். அந்தக் காலத்திலேயே பெண்கள் ஆண்களுக்கு அடிமைகளாக இருந்திருக்கிறார்கள். அந்தக்கால அரசர்கள் அநீதி இல்லாதவர்களாக இருந்திருக்கிறார்கள். அந்தக் காலத் தெய்வங்கள் நியாயம், அநியாயம் இல்லாமல் பார்ப்பனர்கள் தவிர மற்ற நிரபராதிகளையெல்லாம் வெந்து சாம்பல் ஆகும்படி செய்திருக்கின்றன. புத்தியே இல்லாத வெறிபிடித்த பெண் ஒரு தேவதையாக ஆகி இருக்கிறார்கள். தாசி வீட்டில் இருக்கும் ஓர் ஆண் பிள்ளை எந்தப் பெண்ணைப் பற்றியும் சிந்தித்துப் பாடலாம். தாசி வேறு ஓர் ஆணைப்பற்றிப் பாடக்கூடாது என்பதைக் காட்டுகிறது. இந்த லட்சணத்தில் கண்ணகிக்குக் கோயில் கட்டிய முட்டாள்தனமும், கண்ணகித் தெய்வத்தின் பெருமையும், இராமாயண, பாரத, பெரிய புராணப் புளுகையும் மூட நம்பிக்கையும் தோற்கடித்து விடும்போல இருக்கிறது. (கண்ணகி கதையிலுள்ள மூட நம்பிக்கைகளைத் தொகுத்து மற்றொரு சமயம் கூறுவோம்) கண்ணகி நாட்டில் இருந்த கற்புள்ள பெண்களைப் பார்த்தால், உலகத்தில் உயிருடன் கூடிய எப்படிப்பட்ட பெண்ணும் கற்பாய் இருக்க முடியவே முடியாது என்பதுடன், கடுகளவு கூட அவை அறிவுக்கும் மனிதத் தன்மைக்கும் பொருத்தமாக இருக்கிறது என்று சொல்லவும் முடியாது. உதாரணம் சொல்லுகிறேன் பாருங்கள்.

முதலாவது பத்தினிப் பெண்

கண்ணகி மதுரைப் பாண்டிய மன்னனிடம் தனது இருப்பிடத்தைப் பற்றிச் சொல்லும்போது, தனது நாட்டில் ஏற்கனவே இருந்த 7 கற்புள்ள மகளிரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறாள். அதை இங்கு குறிப்பிடுகிறேன். அப்பெண்களின் கற்புத் தன்மைகளாவன:

இவள் ஒரு காட்டில் திரிந்து கொண்டு இருந்த ஓர் அழகிய பெண். இவளை அங்கு இருந்த ஆண் மகன் கண்டு ஆசைப்பட்டான். உடனே கூடிக் கலவி செய்தார்கள். அந்த ஆண் தன் காரியம் தீர்ந்ததும் அவசரமாக எழுந்து போய்விட்டான். பிறகு அந்தப் பெண் அலைந்து திரிந்து அவனைக் கண்டுபிடித்தாள். அப்போது அவன் அவளைத் தனக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டான். அதற்கு அவள் தாங்கள் இருவரும் கலவி செய்த இடத்தைக் குறிப்புச் சொன்னாள். அதுவும் தெரியாது என்று சொல்லிவிட்டான். பிறகு அந்தப் பெண் இவனைத் தான் கலந்தது உண்மையானால், அதுமுதல் இவனைத்தவிர வேறு கணவனை மனதில் நினையாமல் கூட இருந்தது உண்மையானால், தாங்கள் கலவி செய்த அந்தக் காட்டுக் குடிசையும், அதன் பக்கத்தில் இருந்த வன்னிமரமும் இந்த இடத்திற்கு வந்து சாஷி சொல்லவேண்டும் என்று கடவுளை வேண்டினாள். அது போலவே அந்தக் குடிசையும், வன்னி மரமும் அந்த விவகார இடத்திற்கு வந்து, ‘ஆம் இவன் இவளைக் கூடினான் நாங்கள் பார்த்தோம் ‘ என்று சாஷி சொல்லிற்று. பிறகு சேர்த்துக் கொண்டான். எனவே, இவள் ஒரு பத்தினி.

இரண்டாவது பத்தினிப் பெண்

இரண்டு பெண்கள் ஆற்று ஓரம் கரையில் ஊசலாடுகையில், ஒரு பெண் மற்றொரு பெண்ணைப் பார்த்து, அங்கிருந்து ஒரு மணற் பாவையை (உருவத்தை)க் காட்டி இதுதான் உன் கணவன் என்று சொன்னவுடன், அந்தப் பெண் அந்த இடத்தைவிட்டுப் போகாமல், ஆற்று வெள்ளம் அந்தப் பாவையை அடித்துக் கொண்டு போகாமலும் கரைந்து போகாமலும் காப்பாற்றினாள். இவள் ஒரு பத்தினிப் பெண் ?

மூன்றாவது பத்தினிப் பெண்

கரிகாற்சோழன் மகள் இவள். தன் கணவனைக் காவேரி அடித்துக்கொண்டு போய்க் கடலில் சேர்த்துவிட, அவனைத் தேடிச் சென்று கடலினிடத்தில் முறையிட்டுக் கடல் கணவனைத் தரப்பெற்றுத் திருப்பிக் கொண்டு வந்தவள். இவளொரு பத்தினிப் பெண்.

நான்காவது பத்தினிப் பெண்

தன்னைவிட்டுப் பிரிந்து போன கணவன் வரும் வரை கடல் கரையிலேயே அவன் போன வழியைப் பார்த்துக்கொண்டே கல்லாகக் கிடந்திருந்து, கணவன் வந்தபிறகு பெண் உருப்பெற்றுக் கணவனுடன் வீடு வந்து சேர்ந்தவள். இவள் ஒரு பத்தினிப் பெண்.

அய்ந்தாவது பத்தினிப் பெண்

ஒருத்தி தன் மாற்றாள் குழந்தை கிணற்றில் தவறி விழுந்துவிடத் தன் குழந்தையையும் கிணற்றில் போட்டுவிட்டு இரண்டும் வெளி வரவேண்டும் என்று சொல்லி, அக்குழந்தைகளை அடைந்தாள். இவளொரு பத்தினிப் பெண்.

ஆறாவது பத்தினிப் பெண்

இவள் கணவன் தன்னை விட்டுப் பிரிந்து இருந்த காலத்தில் வேறு ஒருவன் இவளை உற்றுப்பார்த்தது கண்டு தன் முகத்தைக் குரங்கு முகமாக்கிக் கொண்டு கணவன் வந்ததும் அதை மாற்றிக் கொண்டாள். ஆகவே, இவளொரு பத்தினிப் பெண்.

ஏழாவது பத்தினிப் பெண்

ஒரு பெண் தன் தோழியைப் பார்த்து விளையாட்டுக்காகத் தான் ஒரு பெண்ணையும் அவள் ஓர் ஆணையும் பெற்றால், அவ்விருவரும் கணவனும் மனைவியுமாக வாழ்வர் என்று சொன்ன சொல்லை அத்தோழி அப்பெண்ணின் மகளிடம் கூற, அந்த மகள் உடனே அந்தத் தோழியின் மகனுக்கு மனைவி ஆகிவிட்டாள். இவளொரு பத்தினிப் பெண்.

‘ஆகவே, நான் இந்த ஏழு பத்தினிகளும் பிறந்த ஊரில் பிறந்த பெண் ஆகையால், நானும் கற்புள்ள பெண்ணாய் இருந்தால், இந்த மதுரை மாநகரம் தீப்பிடித்து எரிய வேண்டும். ஆனால், மதுரையில் உள்ள ஆரியர்களை எரிக்கக்கூடாது ‘ என்று சொல்லித் தனது முலைகளில் ஒன்றைத் தன் கையில் கெட்டியாகப் பிடித்துத் திருகிப் பிடுங்கி எறிந்து அதிலிருந்து நெருப்புப்பற்றிக் கொள்ளச் செய்தாள்.

எனவே, தமிழ்நாட்டின் பழந்தமிழ் மக்களின் புத்திக்கும், நடைக்கும், ஒழுக்கத்துக்கும், ஆட்சி முறைக்கும், வீரத்திற்கும் இந்த இலக்கியங்கள் எடுத்துக்காட்டாக ஆகுமா என்று உங்களைக் கேட்கிறேன். இது எந்த விதத்தில் ஆரியர் புளுகையும் முட்டாள்தனத்தையும்விட குறைந்து இருக்கிறது என்று கேட்கிறேன்.

– விடுதலை ஜூன் 16, 1943