சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்

ஐரோப்பா பிற கண்டங்கள் மீது புனிதப்போரை ஆரம்பித்து பல வருடங்களாகி விட்டன. இந்தப்போரின் நோக்கம் மதம் பரப்புவதல்ல, மாறாக லிபரலிசம்(அல்லது தாராளவாதம்) என்ற சித்தாந்தத்தை பரப்புவது. அதற்கு காரணம், தாம் மட்டுமே உலகில் சிறந்த நாகரீகத்தை கொண்டிருப்பதாக நம்புவது. இந்தக் கருத்து, முதலில் நவநாசிகள், நவபாசிஸ்டுகள் என்று ஆரம்பித்து, வலதுசாரி ஜனநாயக கட்சிகளிலும் எதிரொலிக்கின்றது. சில புத்திஜீவிகள், வெகுஜன ஊடகங்க தனது வாத திறமையால் ள்பெரும்பான்மை மக்களை கவர்கின்றனர்.

ஐரோப்பாவின் பூர்வீகம் என்ன? அவர்கள் கூறும் ஐரோப்பிய நாகரீகம் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது? அத்தனை காலம் தனித்துவத்தை பேணி வருகின்றதா? பல வரலாற்று உண்மைகள் இன்றைய மக்களுக்கு தெரிவதில்லை. ஐரோப்பிய கலாச்சாரத்தின் தோற்றுவாய் என்று காட்டப்படும் கிரேக்க நாகரீகம், அன்று தனக்கு மேற்கில் இருந்த ஐரோப்பாவை கணக்கெடுக்கவில்லை. அவர்களின் வர்த்தக தொடர்பு முழுவதும் மத்தியகிழக்கை சார்ந்தே இருந்தது. இன்று ஐரோப்பிய மொழிகள் பயன்படுத்தும் எழுத்துகள் பினீசியரிடம்(இன்று லெபனான்) கடன்வாங்கியவை. அரேபியர்கள் ஒன்றுக்கு முன்னாள் பூச்சியம் உண்டு என்று கற்றுக்கொடுத்தார்கள். கூடவே இலக்கங்களையும் இரவல் கொடுத்தனர்.

முதலில் சிலுவைப்போர்களில் இருந்து தொடங்குவோம். அத்ற்கு முன்பும் மதத்தின் பெயரால் நடந்த போர்கள் பல இருந்த போதும், உலகம் தற்போது ஐரோப்பிய மையவாத கல்வியை கற்பதால், சிலுவைப்போர்கள் முதன்மைப்படுகின்றன. அன்றைய பாப்பரசர் சிலுவைப்போரை தொடங்கியதற்கு, ஜெருசலேம் முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக காரணம் கூறினார்.  அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் பாப்பரசரின் அறைகூவலுக்கு பின்னால் இருந்த அரசியல் பற்றி பிற்காலத்திலேயே ஆராயப்பட்டது.

ஜெருசலேமும், பிற கிறிஸ்தவ புனிதஸ்தலங்களையும் கொண்ட பாலஸ்தீனா ரோமர்களின் ஆட்சியின் கீழ் இருந்து வந்த காலத்தில், குறிப்பாக சொன்னால் ரோம சாம்ராஜ்யம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த காலத்தில் தான், கிறிஸ்தவ மதம் பரவியது. கொன்ஸ்டான்திநோபிலை (இன்று துருக்கியில் உள்ள இஸ்தான்புல்) தலைநகராக கொண்டிருந்த கிழக்கு ரோமப் பேரரசு தான் முதன் முதலில் கிறிஸ்தவத்தை அரசமதமாக்கியது. இருப்பினும் அது கிரேக்க வழிபாட்டு முறையை பின்பற்றியது. இதனால் அன்று இன்றைய கிரேக்கம், துருக்கி, பாலஸ்தீனம், எகிப்து போன்று அவர்களின் அரசியல் ஆதிக்கம் நிலவிய இடங்களில் கிறிஸ்தவம் பரவியிருந்தது. மேற்கு ரோமப் பேரரசில் ரோமன் கத்தோலிக்க வழிபாட்டு முறையை பின்பற்றும் கிறிஸ்தவ மதம் அரச மதமாகியது.

இதற்கிடையே அரேபியாவில் இருந்து  தோன்றிய இஸ்லாம்  அரசியல் சக்தியாகி அண்டை நாடுகளையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது. அவ்வாறு பரவிய இஸ்லாமிய சாம்ராஜ்யம் பாலஸ்தீனத்தையும், துருக்கியையும் கைப்பற்றியதால், ரோமர்கள் இந்தியா போன்ற ஆசிய நாடுகளுடன் செய்து வந்த வர்த்தகம் தடைப்பட்டது. அது ஐரோப்பாவில் பாரிய பொருளாதார பிரச்சினையை உருவாக்கியது. உதாரணமாக குளிர்சாதனப்பெட்டி இல்லாத அன்றைய காலத்தில், இறைச்சியை பதனிட இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நறுமண சரக்கு தூள்கள் பயன்படுத்தப்பட்டன. அடுத்தது சீனாவில் இருந்து வந்து கொண்டிருந்த பட்டு போன்ற பொருட்கள் யாவும் தற்போது அரிதாகி, விலையும் பலமடங்கு அதிகரித்து விட்டது.


அரசியல் தளத்தில் ஒரு உண்மை சரித்திர ஆசிரியர்களால் நீண்ட காலமாக மறைக்கப்பட்டு வந்தது. ரோம சாம்ராஜ்யம் ஒருபோதும் வீழ்ச்சியுற்று மறையவில்லை! அது அரச-மதகுருவான பாப்பரசரால் கிறிஸ்தவ மதம் என்ற சித்தாந்தத்தால் மறுவார்ப்பு செய்யப்பட்டது. நமது காலத்தில் சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றுவதற்கு ஒப்பானது. அந்த வகையில் முன்னாள் ரோம ராஜ்யத்தின் மாகாணமான பாலஸ்தீனம், துருக்கி, எகிப்தை போன்றே எதிரிப்படைகளால் கைப்பற்றப்பட்ட அரசியல் நிகழ்வாக இருந்த போதும், கிறிஸ்தவ புனித ஸ்தலங்கள் இருப்பதை காரணமாக காட்டி, அனைத்து ஐரோப்பிய கிறிஸ்தவர்களையும் ஒன்று திரட்டுவது இலகுவாக இருந்தது. மேலும் அன்று ஐரோப்பாவில் இருந்த மன்னர்கள் யாவரும், வத்திகானில் இருக்கும் பாப்பரசருக்கு கீழ்படிந்தே ஆட்சி செய்தனர்.

பாப்பரசரின் கோரிக்கைக்கு செவிமடுத்து பல்வேறு விதமான படைகள், அரச இராணுவம், தனியார் இராணுவம், ஆயுதக்குழு இவ்வாறு பலவகை படைகள் அன்று ஜெருசலேமை கைப்பற்ற சென்றன. அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்காக போர் புரிய சென்றாலும், பல இடங்களில் ஒழுங்கற்ற காடையர் கூட்டமாக தான் நடந்து கொண்டனர். ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள், சிலுவைப் போர்வீரர்களை புனிதப்போராளிகள் போன்று சித்தரித்தாலும், மறுபக்கத்தில் அரேபிய வரலாற்றாசிரியர்கள் அவர்களை கொள்ளைக்காரர்களாகவும், கொலைகாரர்களாகவும் விபரித்தனர். அது ஒன்றும் ஆதாரமற்ற கூற்றல்ல. கிரேக்க கிறிஸ்தவர்கள் கூட சிலுவைப்போர் படையெடுப்புகளால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஏனெனில் ரோமன் கத்தோலிக்க மதமே சிறந்தது என்ற மதவெறியால் வழிநடத்தப்பட்ட சிலுவைப்போர் வீரர்கள், முஸ்லிம்களை மட்டுமல்ல கிரேக்க கிறிஸ்தவர்களையும் கொன்று குவித்தனர்.

அப்போது இஸ்லாமிய சுல்தான்கள் ஒற்றுமையின்றி தமக்குள் சண்டையிட்டதால், சிலுவைப்போர் படைகள் இலகுவாக தோற்கடிக்க முடிந்தது. இஸ்லாமியர்கள் சலாவுதீன் என்ற குர்திய இனத்தை சேர்ந்த தீரமிக்க தளபதியின் கீழ் ஒன்றிணைந்த பின்னர் தான் ஜெருசலேமை ஒரு நூற்றாண்டாக கைப்பற்றி வைத்திருந்த ஐரோப்பிய கிறிஸ்தவ படைகளை வெளியேற்ற முடிந்தது. இன்றும் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற தேசத்தை உருவாக்கியவர்கள், ஐரோப்பிய யூதர்கள் என்பதால், சிலுவைப்போர் ஞாபகங்கள் அரேபியாவில் மீண்டும் வருவதில் வியப்பில்லை.

துருக்கியில் ஒஸ்மான் அலி தலைமையிலான துருக்கி இஸ்லாமியப்படைகள், , துருக்கியை கைப்பற்றியதுடன் நில்லாது இன்றைய பொஸ்னியா வரை தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். பெரும்பாலும் அரசியல் வெற்றிகளைப் பற்றியே எழுதப்பட்டு வந்தாலும், சாதாரண மக்களின் நிலை அதனோடு இழுபட்டே செல்கின்றது. ஒரு காலத்தில் கிரேக்கர்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் இருந்த மேற்கு துருக்கி மக்கள், பின்னர் மொங்கோலிய படையெடுப்பாளர்களின் துருக்கி மொழியை தமது தாய் மொழியாக்கியதுடன்,  இஸ்லாமியராகினர். அதே போன்று பொஸ்னிய முஸ்லிம்கள் கூட ஒரு காலத்தில் செர்பிய மொழி பேசும் கிறிஸ்தவர்களாக இருந்தவர்கள் தான்.

கிறிஸ்தவர்கள் இஸ்லாமியராவதும், இஸ்லாமியர் கிறிஸ்தவராவதும் அந்த இடத்தில் யாருடைய ஆதிக்கம் நிலவுகின்றது என்பதைப் பொறுத்தது. ஒரு காலத்தில் அரேபியராகவும், முஸ்லிம்களாகவும் இருந்த தெற்கு இத்தாலியில் இருக்கும் சிசிலி, சின்னஞ்சிறு மால்ட்டா தீவு மக்கள் பின்னர் கத்தோலிக்க மதத்தை தழுவிக்கொண்டனர். மதம் மாற்றுவதில் கிறிஸ்தவ ராஜ்யத்திற்கும், இஸ்லாமிய ராஜ்யத்திற்குமிடையில் சில வேறுபாடுகள் இருந்தன. கிறிஸ்தவ ஆட்சியாளர்கள் தமது நாட்டினுள் பிற மதங்களை பொறுத்துக் கொள்ளவில்லை. இதனால் பலர் பலவந்தமாக கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டனர். அதற்கு மாறாக இஸ்லாமிய ஆட்சியாளர்கள், தமது நாட்டினுள் கிறிஸ்தவர்களை,யூதர்களையும் வாழ விட்டனர்.  முரண்நகையாக அன்றைய இஸ்லாமிய அரசாட்சியில் இருந்த “சகிப்புத்தன்மை கொள்கை” இன்றைய ஐரோப்பிய நாடுகளின் அரச நிர்ணய கொள்கையாகி உள்ளது.

ஐரோப்பியர்கள், இஸ்லாமிய ஆட்சியாளரிடம் இருந்து கற்றுக் கொண்டவை நிறைய இருக்கின்றன. ஒரு வகையில் சிலுவைப்போர்களின் எதிர்மறையான, அதே நேரம் அனைவருக்கும் நன்மையளித்த விளைவுகள் அவை.
இஸ்லாமிய சாம்ராஜ்ய தலைநகரான பாக்தாத்தில் கணிதம், விஞ்ஞானம், மருத்துவம், வானசாஸ்திரம், தத்துவவியல், இலக்கியம் போன்ற பலவற்றை கற்றுத்தேர்ந்த அறிஞர்கள் அரச உதவியில் பல நூல்களை எழுதினார்கள். அதே நேரம் ஐரோப்பாவில் அரசர்க்கரசனான காரல் சக்கரவர்த்தி தனது பெயரைக் கூட எழுதத் தெரியாதவராக இருந்தார். அந்தக்காலத்தில் அனேகமாக பாப்பரசர் உட்பட கிறிஸ்தவ மதகுருக்கள் மட்டும், எழுதப்படிக்க தெரிந்தவர்களாக அதுவும் லத்தீன் மொழியில் பைபிளை மட்டும் படித்துக் கொண்டிருந்தனர்.

சிலுவைப்போரில் இஸ்லாமிய ராஜ்யப் பகுதிகளை கைப்பற்றிய வீரர்கள், அங்கே தம்மை விட நாகரீக வளர்ச்சியடைந்த சமுதாயத்தை கண்டு வியந்தனர். அவ்வாறு தான் அறிவியல் ஐரோப்பாவை வந்தடைந்தது. குறிப்பாக நவீன மருத்துவம் அரேபியரிடம் இருந்து தான் கற்றுக்கொண்டதால், ஐரோப்பிய மக்கள் காப்பாற்றப்பட்டனர். அதுவரை சாதாரண தலைவலி என்றாலும், மண்டைக்குள் இருக்கும் “அசுத்த ஆவியை” ஆணியடித்து ஓட்டை துளைத்து வெளியேற்றும் மருத்துவர்களைத் தான் ஐரோப்பா கண்டிருந்தது. கிறஸ்தவ மதம் பரவ முன்னர், மூலிகை வைத்தியம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் கிறிஸ்தவ மதம் அவ்வாறு வைத்தியம் செய்வோரை எல்லாம், “சூனியக்காரிகள்” என்று கூறி உயிரோடு எரித்து, மூலிகை மருத்துவர்களை இல்லாமல் செய்து விட்டது.

ஸ்பெயின் நூறாண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமிய நாடாக இருந்தது. அதன் ஆட்சியாளர்கள் இன்றைய மொரோக்கோவில் இருந்து வந்த “மூர்கள்”. (இலங்கையில் சோனகர்களை குறிக்கும் “மூர்கள்” என்ற சொல் போர்த்துகேயரால் அறிமுகப்படுத்தப்பட்டது.) அன்று கல்வியறிவில் பின்தங்கியிருந்த ஐரோப்பியக் கண்டத்தில், “இஸ்லாமிய ஸ்பெயினில்” பல்கலைக்கழகம் நிறுவப்பட்டிருந்தது. அங்கே பல மருத்துவ, அறிவியல் நூல்கள் கிரேக்க மொழியில் இருந்து அரபு மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. ஸ்பெயினில் முஸ்லிம்களை அடித்து விரட்டிய கிறிஸ்தவப்படைகள் இந்த நூல்களை கைப்பற்றி ஸ்பானிய மற்றும் ஐரோப்பிய மொழிகளுக்கு மொழிபெயர்த்ததால் தான் நாம் தற்போது காணும் நவீன மருத்துவம் தோன்றியது.

கிறிஸ்தவ ஐரோப்பாவுக்கும், இஸ்லாமிய அரேபியாவுக்கும் இடையேயான உறவு எப்போதுமே பகைமையாக இருக்கவில்லை. கத்தோலிக்க மதத்திற்கெதிராக கிளர்ச்சி செய்து புரடஸ்தாந்தினராக மாறிய ஒல்லாந்துக்காரர்கள், தம்மை ஸ்பானிய நுகத்தடியில் இருந்து விடுவித்துக் கொள்வதற்காக 80 ஆண்டு காலம் போர் புரிந்த காலத்தில், மூர்களுடன் கூட்டுச் சேர்ந்தனர். அத்லாந்திக் சமுத்திரத்தில் ஒல்லாந்து கப்பல்களும், அரேபியரின் கப்பல்களும் ஒன்றிணைந்து ஸ்பானிய கடற்படையுடன் போரிட்டன. மொரோக்கோவின் காசாபிளாங்கா நகரம் அப்போது ஐரோப்பிய கடலோடிகளின் புகலிடமாக இருந்தது. இந்தக் கடலோடிகளில் சிலர் கடற்கொள்ளைக்காரர்கள். அவர்களோடு முன்பு ஸ்பெயின் கிறிஸ்தவ படைகள் வெளியேற்றிய முஸ்லீம் அகதிகளும்(ஸ்பானிய முஸ்லிம்கள்), தமது தாயக மீட்பு போராட்டத்தின் ஒருபகுதியாக, ஸ்பானிய கப்பல்களை தாக்கும் கடற்கொள்ளையராக மத்தியதரைக் கடலில் ஆதிக்கம் செலுத்தினர்.

சிலுவைப்போர்கள் தொடர முடியாமற் போனதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஐரோப்பாவில் புரட்டஸ்தாந்து மதத்தின் தோற்றம், பின்னர் நெப்போலியனின் லிபரல் சாம்ராஜ்யம் பாப்பரசரின் மத ஆதிக்கத்தை முற்றாக அடக்கியமை போன்ற காரணங்கள் குறிப்பிடத்தக்கவை. பிரேஞ்சுப்புரட்சியும், நெப்போலியனின் நாஸ்திக இராணுவமும் கத்தோலிக்க தேவாலயங்களின் சொத்துகளை பறிமுதல் செய்தன. அதுவரை பெரும் நிலவுடமையாளராக இருந்த தேவாலயங்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டதால், அவற்றோடு கட்டுண்டிருந்த உழைக்கும் மக்களும் விடுதலை பெற்றனர்.

ஐரோப்பாவை கிறிஸ்தவமதம் இருண்ட கண்டமாக வைத்திருந்த காலம் ஒன்றுண்டு. இங்குள்ள சரித்திர பாடப் புத்தகங்களும் அப்படித் தான் கூறுகின்றன. உலகம் முழுவதும் “கண்டுபிடித்து”, காலனியாக்கிய காலங்களை தான், “பொற்காலம்” என்கின்றனர். உண்மையில் நாம் வாழும் நவீன காலம், பின்காலனித்துவ தொடர்ச்சி தான். காலனிகளால் தான் ஐரோப்பா முன்னேறியது. அறிவைப் வளர்த்தது. செல்வத்தை பெருக்கியது. இன்று தாம் பெற்ற அறிவை விற்று பொருளீட்டுகின்றனர். சேர்த்த செல்வத்தை முதலீடு செய்து பணமாக்குகின்றனர்.

உலகம் எப்போதும் நாம் விரும்புவது போல சுழல்வதில்லை. ஐரோப்பியரின் வருகைக்கு பின்னர் தான் வெளி உலகம் பற்றி, செல்வத்தை பெருக்கும் கலை பற்றி, அறிந்து கொண்ட காலனி நாடுகளின் மக்கள், தாமும் ஐரோப்பியர் அடிச்சுவட்டை பின்பற்றுவது எதிர்பார்க்கக்கூடியதே. ஆனால் ஒரு வித்தியாசம். ஐரோப்பியர்கள் நமது நாடுகளுக்கு ஆட்சியாளராக வந்தார்கள். நமது மக்களோ ஐரோப்பிய நாடுகளுக்கு உழைப்பாளிகளாக செல்கின்றனர். இரண்டுக்குமிடையில் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம் உண்டு. ஆதிக்கவாதிகள் விரும்பிய எதையும் அபகரிக்கலாம். ஆனால் உழைப்பாளிகள், தமது உழைப்பை வாங்குபவனை பணக்காரனாக்குகின்றனர்.

இருப்பினும் மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வந்து குடியேறுபவர்களை, “காலனியவாதிகள்” என்று குற்றம்சாட்டும் போக்கு இன்றைய ஐரோப்பிய வலதுசாரி அரசியலில் சகஜம். குறிப்பாக முஸ்லிம்களின் வருகை அவர்களுக்கு அச்சமூட்டுவதாக உள்ளது. அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. ஒன்று, ஐரோப்பியர்கள் தமது காலனிகளில் வாழ்ந்த மக்களை கட்டாயப்படுத்தி கிறிஸ்தவ மதமாற்றம் செய்தனர். நான் முன்பு கூறியபடி நெப்போலியன் காலத்தில் நாஸ்திகவாதம் கோலோச்சிய பிரான்ஸ் கூட தனது காலனிகளில் கிறிஸ்தவமதத்தை பரப்பியது குறிப்பிடத்தக்கது. இந்த “கிறிஸ்தவமயமாக்கல்” உலகம் முழுவதும் ஐரோப்பாவுக்கு விசுவாசமான மக்கள் கூட்டத்தை உருவாக்கும் உள்நோக்கம் கொண்டது.

ஒரு காலத்தில் தமது காலனி ஆதிக்கத்தின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த மக்கள், பிரத்தியேகமாக உலகின் இரண்டாவது பெரிய மதமான இஸ்லாமை பின்பற்றும் மக்கள், எதிர்காலத்தில் ஐரோப்பாவில் கலாச்சார மாற்றங்களை கொண்டுவரலாம்? இவ்வாறு தீவிர வலதுசாரிகள் மத்தியில் மட்டுமல்ல, அரசாங்க மட்டத்திலும் ஒரு கருத்து நிலவுகின்றது. இதனால் பல்வேறு “அகதி தடுப்பு”, “குடியேற்ற தடுப்பு” சட்டங்கள் மூலம், வெள்ளை-கிறிஸ்தவ இன அடையாளத்தை பேண விளைகின்றனர். எப்போதும் ஒரு திருடன் பிறரை நம்பமாட்டான் தானே? ஒரு காலத்தில், தாம் உள்நோக்கத்துடன் செய்த வேலைகளை, தம்மிடமே கற்றுக்கொண்ட வித்தைகளை, தமக்கு எதிராக பயன்படுத்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இவ்வாறு நீங்கள் நினைக்காமல் இருக்கலாம். ஆனால் ஐரோப்பிய ஆளும்வர்க்க சிந்தனை அதுதான்.

இந்தக்கட்டுரையின் ஆரம்பத்தில் கூறியுள்ளபடி, சிலுவைப்போர்கள் எவ்வாறு ஐரோப்பாவை நாகரீகப்படுத்தியது என்ற உண்மை இன்றைய/நாளைய தலைமுறைகளுக்கு தெரியக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றது. இளம்சமுதாயம் வரலாறு பற்றிய அக்கறை இன்றி இருப்பதும் அதற்கு உதவுகின்றது. ஐரோப்பிய நாகரீகத்தில் பல மேன்மையான அம்சங்கள் இருந்தாலும், அதன் வேர்கள் பிற கலாச்சாரங்களில் இருந்து தான் வருகின்றன. உலக கலாச்சாரங்கள் ஒன்றில் இருந்து மற்றொன்று கற்றுக்கொள்கின்றது. பல சிறந்த கலாச்சாரங்களின் கலப்பால் நாகரீகம் உருவாகின்றது. அது தம்மால் மட்டுமே சாத்தியம் என்று எந்த இனமும் ஏகபோக உரிமை பாராட்ட முடியாது. இதனை நவீன ஐரோப்பிய சமுதாயம் உணராவிட்டால், உலகில் வேறொரு கோடியில், ஐரோப்பிய கலாச்சாரத்தை விட மேம்பட்ட பிறிதொரு நாகரீகம் உருவாகுவதை தவிர்க்க முடியாது. அது இயற்கை நியதி. உலகில் எந்தவொரு சாம்ராஜ்யமும், நாகரிகமும் நிலைத்து நின்றதில்லை. இது பைபிள் நினைவு கூறும் சாட்சியம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: